டில்லி

தேசிய ஊரடங்கால் குடும்ப வன்முறை குறித்த புகார்கள் அதிக அளவில் வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் படு வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்குத் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் நாடு முழுவதும் அனைத்து நிறுவனங்கள், தொழிலகங்கள்,  திரையரங்குகள் போன்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பலரும் பணி இல்லாததால் ஊதிய இழப்பு, பணி இழப்பு அச்சம் ஆகியவற்றால் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.   இந்த மன உளைச்சல் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை தூண்டி விடுவதால் கணவன் மனைவி மற்றும் குடும்பத்தினர் இடையே மோதலை ஏற்படுத்துகிறது.  இந்த மோதல் சில வேளைகளில் மிகவும் அதிகரித்து வன்முறையில் முடிகிறது.

தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா, “கடந்த மார்ச் 30 ஆம் தேதியில் இருந்து 30 ஆம் தேதி வரை தேசிய மகளிர் ஆணையத்துக்கு 58 புகார்கள் வந்துள்ளன.  இவை அனைத்தும் இ மெயில் மூலம் வந்துள்ளன.  இவை பெரும்பாலும் வட இந்தியாவில் அதிலும் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்துள்ளன.

வீட்டிலேயே உள்ள ஆண்கள் தங்கள் மன உளைச்சலைப் பெண்கள் மீது வெளிப்ப்டுத்துகின்ரன்ர்.  இதனால் மோதல் ஏற்படுகிறது.  இந்த மோதல் முற்றும் போது அது குடும்ப வன்முறையாக உருவெடுக்கிறது.  இதுவே இத்தனை புகார்களுக்கு காரணம் ஆகும்.

தேசிய ஊரடங்கு காரணமாக தபால் மூலம் வரும் புகார்கள் குறைவாக உள்ளன.  தற்போது பெண்கள் எங்கள் ஆணையத்தை அணுகி புகார் அளிக்க முடியாத நிலையில் உள்ளனர். ஆனால் அவர்கள் காவல்துறை மற்றும் மாநில மகளிர் ஆணையம் மூலம் தங்கள் புகார்களை அனுப்பி வைக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய மகளிர் ஆணையத்துக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 270 புகார்கள் வந்துள்ளன.   அது பிப்ரவரியில் 302 ஆக உயர்ந்தது.  மார்ச் மாத இறுதியில் தேசிய ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் 291 புகார்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.