வாரணாசி

வாரணாசியில் நடந்த பிரதமர் மோடியின் நேற்றைய சாலைப் பேரணிக்காக சாலைகளைக் கழுவ 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் பயன்படுத்தப் பட்டுள்ளது.

 

உலகில் உள்ள பல நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வரும் இடம் வாரணாசி ஆகும். இந்தியாவின் புனித நகரங்களில் ஒன்றான இந்நகரில் கங்கை நதி ஓடுகிறது. உலகெங்கும் உள்ள மக்கள் காசியில் இருந்து கங்கை நதி நீரை எடுத்துச் சென்று பூஜித்து வருகின்றனர். இந்துக்களின் புனித நதி என்றால் கங்கை என்பதும் புனித நகரம் என்றால்வாரணாசி என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் கங்கை நீரை எடுத்து செல்லும் அதே நேரத்தில் வாரணாசி நகர மக்களில் 70% மக்களுக்கு மட்டுமே குழாய் மூலம் கங்கை குடி நீர் வழங்கப்படுகிறது. வாரணாசி என்பது பிரதமர் மோடியின் தொகுதியாக இருந்த போதிலும் பலர் நகராட்சி குடிநீர் இணைப்பு கிடைக்காததால் இன்னும் ஆழ்துளை குழாய் கிணற்று நீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தனது வாரணாசி தொகுதியில் ஒரு சாலைப் பேரணியில் கலந்துக் கொண்டார். வாரணாசி சாலைகள் திருவிழாக்களின் சமயத்தில் மட்டுமே கழுவி விடப்படுவது வழக்கமாகும். ஆனால் நேற்றைய சாலைப் பேரணியை முன்னிட்டு 400 தொழிலாளர்களைக் கொண்டு கழுவி விடப்பட்டுள்ளது. இதற்கு 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மோடி தனது பேரணிகளில், “தற்போது குடிநீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. எனவே மீண்டும் பாஜக அரசை அமைப்பதன் மூலம் மட்டுமே இந்த பஞ்சத்தை போக்க முடியும். இந்த குடிநீர் பஞ்சம் இன்னும் ஐந்து வருடங்களுக்குள் அடியோடி ஒழிக்கப்பட்டு ஒவ்வொரு இல்லத்துக்கும் குடிநீர் இணைப்பு வழஙக்ப்படும். அதற்கான தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதுவரை குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்” என அறிவுரை வழங்கி வருவது குறிப்பிடத்தகக்தாகும்.