கங்கையைத் தூய்மைப் படுத்திய கொரோனா வைரஸ்..

கொத்து கொத்தாக உயிரைப் பறித்துச் செல்லும் கொரோனா வைரஸ், காற்றையும் , நீரையும் தூய்மைப் படுத்தி புண்ணியம் தேடிக்கொண்டுள்ளது.

ஊரடங்கால், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் ஓடாததால் டெல்லியில் காற்று மாசு குறைந்து, அங்குள்ள மக்கள் சுத்தமான காற்றைச் சுவாசிப்பதாக மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்திருந்தது.

ஊரடங்கால், புனித நதியான கங்கையும் அழுக்கு நீங்கி பரிசுத்தமாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் மற்றும் ஹரித்துவார் ஆகிய  இரண்டும் கோயில் நகரங்கள் ஆகும்.

அங்குள்ள தொழிற்சாலைகள், திறந்து விடும் கழிவுகள், கங்கையில் கலந்து, அந்த நதியை, அசுத்தமாக்கி இருந்தன.

போதாக்குறைக்கு அங்கு வரும் பக்தர்களும், தங்கள் பங்குக்கு, கங்கையை முடிந்த வரை மாடு படுத்தினர்.

ஊரடங்கால், தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. பக்தர்கள் வருகையும் இல்லை.

இதனால் கங்கையில் இப்போது .சுத்தமான தண்ணீர் ஓடுவதாக உத்தரகாண்ட் மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பெருமிதம் பொங்கத் தெரிவித்துள்ளது.

உத்தராகாண்ட், 2000 ஆம் ஆண்டு, தனி மாநிலம் ஆனது.

அங்கு ஓடும் கங்கை நதிக்கு ‘பி-கிளாஸ்’ தகுதியையே  கொடுத்து வந்தது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.

இப்போது , முதன் முறையாக ‘’ஏ –கிளாஸ் ரேங்க்’ அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் உருவான பின், கங்கை முதல் வகுப்பில் ‘பாஸ்’ செய்திருப்பது, இது முதன் முறை.

– ஏழுமலை வெங்கடேசன்