ஊரடங்கால் நடுத்தெருவில் நடந்த திருமணம்..
உத்தரபிரதேச மாநிலம் பீஜ்நோர் மாவட்டத்தில் உள்ள ரேகார் என்ற இடத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கும், பக்கத்து மாநிலமான உத்தரகாண்ட்டை சேர்ந்த சாயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மணமகள் வீடு ,உத்தரகாண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ஜாஸ்பூர் கிராமத்தில் உள்ளது. மணமக்களின் வீடுகள், இரு மாநிலங்களின் எல்லையில் உள்ளது. மணமகள் ஊரில் திருமணம் நடத்த பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர்.
இதற்காக மணமகன் அரவிந்த், தனது உறவினர்கள் இருவருடன் அந்த கிராமத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். ஊரடங்கு அமலில் இருப்பதால், நிறைய கும்பலை போலீஸ் அனுமதிக்காது என்று அவருக்கு தெரியும். ஆனால், அவரையே ஊருக்குள் விட மறுத்துவிட்டது, உத்தரகாண்ட் போலீஸ். உத்தரபிரதேச எல்லையை தாண்டி, அவரது கார் உத்தரகாண்ட் எல்லைக்குள் நுழைய முற்பட்டபோது, போலீசார் மறித்தனர்.
‘’நீங்கள் போகும் எங்கள் மாநில ஊர், பச்சை மண்டலத்தில் உள்ளது, நீங்களோ சிவப்பு மண்டலத்தில் உள்ள ஊரில் இருந்து வருகிறீர்கள். எனவே இங்கிருந்து நீங்கள், அங்கே போக முடியாது’’ என்று தடுத்து நிறுத்தி விட்டார்கள். \தாலி கட்டும் நேரத்தில் இப்படி ஒரு சிக்கலா? அரண்டு போனார், மாப்பிள்ளை.
மணமகள் வீட்டாருக்கு தகவல் சொல்லி, பெண்ணை உத்தரபிரதேசமும், உத்தரகாண்டும் சந்திக்கும் எல்லையான தர்மபுரா என்ற இடத்துக்கு அழைத்து வருமாறு கூறினார். மணமகளும், அங்கு அழைத்து வரப்பட்டார். இரு மாநில எல்லையில், ஒரு சோதனைச்சாவடி அருகே . கிட்டத்தட்ட நடுச்சாலையில் மணமகள், கழுத்தில் தாலி கட்டினார், மணமகன். இரு மாநில எல்லைகளில் இருந்த போலீசார் மணமக்களை வாழ்த்தியுள்ளனர்