மும்பை

கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டித் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளாக இந்தியன் பிரிமியர் லீக் என்னும் ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரின் 13 ஆம் சீசன் கடந்த மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெற இருந்தது.   இதற்கான அணி வீரர்கள் ஏலம் முடிந்து அனைத்தும் தயார் நிலையில் இருந்த போது கொரோனா பாதிப்பு தொடங்கியது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த இந்திய அரசு கடந்த 24 ஆம் தேதி முதல் இந்த மாதம் 14 ஆம் தேதி வரை ஊரடங்கை அமல் படுத்தியது.   இதையொட்டி ஐபிஎல் போட்டிகளை வரும் ஏப்ரல் 15க்கு மேல் பிசிசிஐ ஒத்தி வைத்தது.  இந்நிலையில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்தது.  அதனால் பிரதமர் மோடி ஊரடங்கை மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதையொட்டிபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலர் ஜெய் ஷா, ஐபில் தலைவர் பிரிஜேஷ் படேல், உள்ளிட்ட பலர் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர்,   அப்போது எடுத்த முடிவின்படி ஐபிஎல் போட்டிகளைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஐசிசி டி 20 தொடர் ரத்தானால் அப்போது ஐபிஎல் தொடரை நடத்தலாம் என பிசிசிஐ ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.