டில்லி

தேசிய ஊரடங்கு உத்தரவால் இந்திய ரயில்வே 94 லட்சம் முன்பதிவை ரத்து செய்து ரூ.1490 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24 முதல் ஏப்ரல் 14 வரை தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  அப்போது ரயில், சாலை, விமான போக்குவரத்துக்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.  கொரொனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் ஊரடங்கு ஏப்ரல் 15 முதல் மே 3 வரை மேலும் நீட்டிக்கப்பட்டு சரக்கு போக்குவரத்து தவிர மற்றவை மீண்டும் ரத்து  செய்யப்பட்டன.

இதனால் ஏற்கனவே ரயில்வே ஊரடங்குக்கு மூன்று நாள் முன்பிருந்தே அதாவது மார்ச் 22 முதல் ஏப்ரல் 14 வரை செய்யப்பட்ட முன்பதிவுகளை ரயில்வே ரத்து செய்தது.  அவ்வகையில் இந்திய ரயில்வே 55 லட்சம் முன்பதிவுகளை ரத்து செய்து ரூ.830 கோடியை திரும்ப அளித்தது.   அப்போது ஏப்ரல்15 ஆம் தேதி முதல் பயணம் செய்யப் பதியப்பட்ட முன்பதிவை ரயில்வே ரத்து செய்யவில்லை. 

ஊரடங்கு ஏப்ரல் 15 முதல் மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரயில்வே மேலும் 39 லட்சம் முன்பதிவை ரத்து செய்து ரூ.660 கோடியைத் திரும்ப அளிக்க உள்ளது.  இந்திய ரயில்வே ஏப்ரல் 15 முதல் முன்பதிவு செய்வதை ஏற்கும் போது ரயில்கள் ரத்து செய்யப்பட்டால் அனைத்து பயணிகளுக்கும் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவித்திருந்தது. 

அதன்படி ஆன்லைனில் பதிவு செய்தவர்களின் பயணக்கட்டணங்கள்  அந்தந்த வங்கி கணக்குகளில் திரும்பச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ரயில் நிலையங்களுக்குச் சென்று முன்பதிவு செய்தோர் தங்களுக்கு வர வேண்டிய பணத்தை ஜூலை 31 வரை பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.    தற்போது மறு உத்தரவு வரும் வரை முன்பதிவை ரயில்வே நிறுத்தி வைத்துள்ளது.