டில்லி

ஜெர்மனியைச் சேர்ந்த 40 வயதான எட்கர்ட் ஜீபெத் என்னும் தேடப்படும் குற்றவாளி ஊரடங்கு காரணமாக டில்லி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 54 நாட்களாக வசித்து வருகிறார்.

கடந்த 2004 ஆம் வருடம் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய தி டெர்மினல் என்னும் திரைப்படம் வெளி வந்தது.  அந்த படத்தில் நவோர்ஸ்கி என்பவர் கிழக்கு ஐரோப்பிய நாடு என திரைப்படத்தில் சொல்லப்படும் ஒரு நாட்டில் இருந்து நியூயார்க் நகர் வருகிறார்.  அந்நாட்டை அமெரிக்கா ஒரு தனி நாடாக ஏற்றுக் கொள்ளாததால் அவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.

மேலும் அமெரிக்காவைப் பொறுத்த வரை அவர் நாடற்றவர் என்பதால் நாட்டுக்கு திரும்பவும் அனுமதி மறுக்கப்படுகிறது.  இதனால் அந்த பயணி அமெரிக்காவுக்குள்ளும் வர முடியாமல்  சொந்த நாட்டுக்கும் திரும்ப முடியாமல் 9 மாதங்கள் விமான நிலையத்தில் வசிக்க நேரிடுகிறது.  இதே நிலை ஜெர்மனியைச் சேர்ந்த எட்கர்ட் ஜீபெத் என்பவருக்கு ஏற்பட்டுள்ளது.  இதில் ஒரே ஒரு வித்தியாசம் ஜீபெத் ஜெர்மனியில் தேடப்படும் ஒரு குற்றவாளி ஆவார்.

ஜீபெத் வியட்நாமில் இருந்து டில்லி வழியாக இஸ்தான்புல் செல்வதற்காகக் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்  வந்து இறங்கி உள்ளார்.   அன்று துருக்கியில் இருந்து வரும் மற்றும் துருக்கிக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் இந்திய அரசு கொரோனா அச்சத்தால் ரத்து செய்தது.   அதன் பிறகு நான்கு நாட்களுக்கு அனைத்து சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டு அதன் பிறகு ஊரடங்கு அமல்ப்டுத்தபட்டது.

இதனால் பல வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவில் சிக்கி உள்ளனர்.  அவர்களை இந்திய அரசு அவரவர் நட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் ஜீபெத் கதை வேறு விதமாக இருந்துள்ளது.  அவர் குற்றவாளி என்பதால் ஜெர்மன் அரசு ஏற்றுக கொள்ள மறுத்துள்ளது.   அவர் தேடப்படும் குற்றவாளி என்பதால் இந்திய விசாவுக்கு விண்ணப்பிக்கவோ இந்தியாவுக்குள் நுழையவோ இயலாத நிலை ஏற்பட்டது.

ஜெர்மன் அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்றாலும் அவர் வெளிநாட்டு விசாவில் வந்துள்ளதால் அவரை காவலில் எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக ஜெர்மன் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. எனவே ஜீபெத் கடந்த மார்ச் 18 முதல் விமான நிலையத்தில் பயணிகள் தங்கும் இடத்தில் தங்கி உள்ளனர்.  விமான நிலைய விதிகளின்படி ஒரு நாள் மட்டுமே பயணிகள் இங்குத் தங்க முடியும்.

ஆனால் ஜீபெத்தை இங்குத் தங்க அனுமதிப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது  அவர் தனது செலவைத் தானே கவனித்துக் கொள்வதாகவும் உடல் மற்றும் மனதளவில் நன்கு உள்ளதாகவும் அவரை சோதித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,

கடந்த வாரம் துருக்கி அரசு இந்தியாவில் சிக்கி உள்ளவர்களை அழைத்து வரச் சிறப்பு விமானம் ஒன்றை அனுப்பி வைத்தது.  ஆனால் துருக்கி அரசு தங்கள் நாட்டுக் குடிமக்களை மட்டுமே அழைத்துச் செல்ல உள்ளதாகக் கூறி ஜிபெத்தை அழைத்துச் செல்ல மறுத்து விட்டது. தற்போது சர்வதேச விமானச் சேவை தொடங்கிய பிறகே இவரை அனுப்பும் நிலை உள்ளது.

எனவே வரும் 17 ஆம் தேதி வரை ஜீபெத் டில்லி விமான நிலையத்தில் தங்கி இருக்கும் நிலையில் மாற்றம் இருக்காது எனக் கூறப்படுகிறது.