போபால்

ஜூனியர் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தைச் சட்ட விரோதமானது என மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் கூறியதால் 3000 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணி புரியும் ஜூனியர் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.  அவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இலவச மருத்துவம் மற்றும் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.

இந்த வேலை நிறுத்தத்தை எதிர்த்து ஜபல்பூரை சேர்ந்த வழக்கறிஞரான சைலேந்திர சிங் என்பவர் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.   இந்த மனுவைத் தலைமை நீதிபதி முகமது ர்ஃபீக் அகமது மற்றும் கஜோய் பால் ஆகியோரின் அமர்வு விசாரித்தது.  கொரோனா பேரிடர் நேரத்தில் இந்த போராட்டம் கண்டனத்துக்கு உரியது எனவும் வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது எனவும் கூறியது.

மேலும் இந்த அமர்வு இன்று பிற்பகல் 2.30 மணிக்குள் ஜூனியர் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது.    அதற்குள் பணிக்கு திரும்பவில்லை எனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.  உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் கோபம் அடைந்த 3000 ஜூனியர் மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.   மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல் முறையீடு செய்ய உள்ளனர்.