சென்னை

மிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் இரு தினங்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பருவ மழை அதிகரித்து வருகிறது.  சென்னை நகரில் தொடர்ந்து பெய்து வந்த மழை நேற்று முதல் நின்றுள்ளது.   சென்னை வானிலை மைய அதிகாரிகள் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர்.  அப்போது அவர்கள் அடுத்த இரு தினங்களுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள்,”தற்போது தாய்லாந்து வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் வரும் 4-ம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கு அடுத்த 2 அல்லது 3 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் நகர்வுகள் தொடர்ந்து கண்காணித்துத் தெரிவிக்கப்படும்.

இதனால் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாகத் தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.   அத்துடன் வட தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்த வரையில் நகரம்  மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாகத் திருவாரூரில் 3 செ.மீ, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, விழுப்புரம், தேனி மாவட்டம் உத்தமபாளையம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ, வேலூர், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், சேலம் மாவட்டம் ஏற்காடு, திருவண்ணாமலை மாவட்டம் போளூர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.