சென்னை
வங்காள விரிகுடாவில் குலாப் புயல் உருவாகி உள்ளதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நேற்று முன் தினம் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவாந்து. தற்போது அது மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு குலாப் எனப் பெயர் சுட்டி உள்ளது. இந்த பெயரைப் பாகிஸ்தான் சூட்டி உள்ளது.
வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு அதைச் சுற்றி உள்ள 13 நாடுகள் பெயர் சூட்டி வருகின்றன. இம்முறை பாகிஸ்தான் நாட்டுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த புயலுக்கு பாகிஸ்தான் குலாப் என்னும் பெயரைச் சூட்டி உள்ளது.
செப்டம்பர் மாதத்தில் தென்மேற்கு பருவ மழைக்காலம் இருந்தாலும் அரிதான வகையிலேயே புயல் உருவாகிறது. இதுவரை கடந்த 2000 ஆம் ஆண்டு பியார் புயலும், 2018 ஆம் ஆண்டு டாயி புயலும் வந்துள்ளது. இந்த வருடம் குலாப் புயல் வந்துள்ளது.
குலாப் புயல் மேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. அனேகமாக ஞாயிறு அன்று அதாவது இன்று மாலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டி விசாக பட்டினம் மற்றும் கோபால்பூருக்கு இடையே கடலைக் கடக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இன்று தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை அருகே உள்ள மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம். நாளை தேனி, திண்டுக்கல், தென்காசி கன்யாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
செவ்வாய்க்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குலாப் புயலால் இன்றும் நாளையும் குமரிக் கடல், மன்னார் வளைகுடா,தென்மேற்கு வங்கக் கடலில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதனால் இந்த பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலூர், நாகபட்டினம், எண்ணூர் ,காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் முதலாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் 2ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.