மெக்கா
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மெக்காவில் உள்ள புகழ்பெற்ற மசூதி மூடப்பட்டுள்ளது.
சீனாவில் 3000க்கும் மேற்பட்டோரைப் பலிவாங்கிய கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று பல உலக நாடுகளில் பரவி உள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசர நிலை அறிவித்துள்ளது. அத்துடன் உலக மக்களுக்கும் பல எச்சரிக்கைகளும் விடுத்துள்ளது.
உலகெங்கும் வசிக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருதடவையாக புனித நகரான மெக்காவுக்கு சென்று வருவதை குறிக்கோளாக கொண்டுள்ளனர். அதன்படி, இந்த ஆண்டும் வழக்கம்போல ஹஜ் பயணம் மேற்கொள்ள தயாராகி வந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மெக்காவுக்கு உம்ரா பயணம் வரும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்க சவுதிஅரேபிய பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சில நாடுகளுக்கு தடையும் விதித்து உள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், மக்கள் ஒரே இடத்தில் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி மெக்காவில் உள்ள மசூதி மூடப்பட்டுள்ளது. முன்னதாக அந்த மசூதி முழுவதும் சுத்திகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.