சென்னை

மிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் இரண்டாம் டோசுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதால் கொரோனா தடுப்பூசி  போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.  முதல் கட்டமாக ஜனவரி 16 முதல் கொரோனா முன் களப் பணியாளர்கள்,  சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அதைத் தொடர்ந்து 60 வயதைத் தாண்டியவர்கள் மற்றும் அதற்கும் பிறகு 45 வயதைத் தாண்டியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.   வரும் மே மாதம் முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்துள்ளது.   இது அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  மாநிலத்தின் பல பகுதிகளில் இந்த கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஏற்கனவே முதல் டோஸ் ஊசி போட்டு கொண்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் ஊசி போட மருந்து இல்லாததால் அவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டால் முதல் டோஸ் தடுப்பூசி போடுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.   இதில் ஒரு சில இடங்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி இல்லை எனவும் வேறு சில இடங்களில் கோவாக்சின் தடுப்பூசி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.    சில இடங்களில் முதல் டோசாக கோவிஷீல்ட் மட்டும் போடப்பட்டு வேறு சில இடங்களில் கோவாக்சின் மட்டும் போடப்பட்டுள்ளது.

பல இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளச் செல்லும் மக்களிடம் மருந்து கையிருப்பு இல்லை எனக் கூறி திருப்பு அனுப்பப்படுகின்றனர்.   இது போல் ஒரு சிலர் பல முறை சென்று ஏமாற்றத்துடன் திரும்ப நேரிடுகிறது.   பல தனியார் மருத்துவமனைகளில் முன்கூட்டியே கட்டணம் செலுத்திய பலருக்கும் மருந்து இல்லாத காரணத்தால் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி கூட போடாத நிலை உள்ளது.

இந்த நிலை அரசு மருத்துவமனைகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் அதிக அளவில் காணப்படுகிறது.  ஒரு மருத்துவமனைக்கு உதாரணமாக 20 டோஸ்கள் தேவைப்பட்டால் அதில் 3 மட்டுமே வழங்கப்படுகிறது.   அரசு மருத்துவமனைகளிலும் இதே தட்டுப்பாடு உள்ளது.  இன்னும் ஒரு மாதத்தில் இந்நிலை சீரடையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..