திருவனந்தபுரம்

நேற்று கேரளாவில் ஓணம் பண்டிகை கொரோனா கட்டுப்பாட்டால் உற்சாகம் இல்லாமல் கொண்டாடப்பட்டுள்ளது.

கோப்பு படம்

நேற்று கேரளாவில் ஓணப் பண்டிகை கொண்டாடப்பட்டது.  சபரிமலை, குருவாயூர்,  பத்மநாபசுவாமி கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.  தற்போது கொரோனா பரவல் காரணமாக  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் இவ்வருடம் ஓணம்  களையிழந்தது.

நேற்று முன்தினம் புத்தாடைகள், பூக்கள் மற்றும் பொருட்கள்  வாங்கத் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு உள்பட நகர் பகுதிகளில் மட்டும்  மக்கள் கூட்டம் அலை மோதிய போதும் கிராமப் புறங்களில் வழக்கமான உற்சாகம்  காணப்படவில்லை. நேற்று ஓணத்தை முன்னிட்டு நேற்று பெரும்பாலான வீடுகளில்  அத்தப்பூ கோலம் போடப்பட்டது.

வருடா வருடம் பொது இடங்களில் பல்வேறு  அமைப்புகள் சார்பில் பெரிய அத்தப்பூ கோலங்கள் போடப்படுவது உண்டு.  இவ்வருடம் எங்கேயும்  போடப்படவில்லை. ஓணம் பண்டிகையை வீடுகளில் மட்டுமே கொண்டாட  வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டதே இதற்குக் காரணமாகும். பண்டிகையை முன்னிட்டு சபரிமலை, குருவாயூர் மற்றும் பத்மநாபசுவாமி  கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதில் சபரிமலை  கோயிலில் மட்டுமே 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் குருவாயூர், பத்மநாபசுவாமி கோயில் உள்பட பிற கோயில்களில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 40  பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். திருவிதாங்கூர் தேவசம் போர்டு  கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஒரே நேரத்தில் 15 பேர் மட்டுமே  அனுமதிக்கப்பட்டனர்.