டில்லி

கொரோனா பாதிப்பால் ரியல் எஸ்டேட் விலைஅக்ள் 20% வரை குறையும் என எச்டிஎஃப்சி வங்கி  தலைவர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  அதை கட்டுப்படுத்த 21 நாட்கள் தேசிய ஊரடங்கைப் பிரதமர் மோடி அறிவித்தார்.  ஆயினும் கொரோனா பாதிப்பு குறையவில்லை.  இன்றுடன் தேசிய ஊரடங்கு முடிவடைய உள்ள நேரத்தில் இன்று பிரதமர் மோடி மே மாதம் 3 ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்தியா கடும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்து வரும் வேளையில் கொரோனா பாதிப்பு இந்த சரிவை மேலும் அதிகமாக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.    இது குறித்து எச் டி எஃப் சி வங்கி தலைவர் தீபக் பரேக், “சரியான நேரத்தில் ஊரடங்கை அரசு அறிவித்தது.  இது கொரோனா பாதிப்பைக் குறைத்து நம்மை வலுவாக்கும் என நம்புகிறேன்.

பங்குச் சந்தையைப் பொறுத்த வரை வீழ்ச்சி அடைந்த போதிலும் அதலபாதாளத்துக்கு எப்போதும் செல்லாது.  நம்மிடம் தேவையான அளவு அன்னிய செலாவணி உள்ளது  அத்துடன் கச்சா எண்ணெய் விலை குறைவதால் அரசிடம் மேலும் அன்னிய செலாவணி அதிகரிக்கக்கூடும்.   மற்ற நாடுகளை விட இந்தியாவில் வெளிநாடு வாழ் மக்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

எனது அனுபவப்படி, பல கட்டுமான நிறுவனங்கள் தவிப்பில் ஆழ்ந்துள்ளதைக் காண்கிறேன்.  ஏற்கனவே அவர்களுக்கு ரெரா, ஜிஎஸ்டி உள்ளிட்ட பலவும் அவர்களைத் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.   இந்த கொரோனா பாதிப்பால் ரியல் எஸ்டேட் விலைகள் 20% வரை குறையக் கூடும்.

இந்த இழப்பைச் சரி செய்ய முத்திரை தீர்வை (ஸ்டாம்ப் டூடி) , மற்றும் பதிவுக் கட்டன ஆகியவற்றைக் குறிப்பிட்ட காலங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.