டில்லி
கொரோனா தாக்கம் காரணமாகக் கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு அலுவலகம் செல்ல விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1.59 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இது மூன்றாம் அலை பரவல் என அஞ்சப்படுகிறது. ஒமிக்ரான் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி பல கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அமலாக்கப்பட்டுள்ளன.
மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று, “கொரோனா அதிகரிப்பு காரணமாகக் கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் வகையில், பணி நேரத்தில் இருக்க வேண்டும்.
இதைப் போல் கட்டுப்பாட்டு மண்டல பகுதியை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், கட்டுப்பாடுகள் நீங்கும் வரை விலக்கு அளிக்கப்படுகிறது. மத்திய அரசில் துணை செயலர்கள் அந்தஸ்துக்குக் கீழ் உள்ள அரசு ஊழியர்களில் 50 சதவீதம் மட்டும் பணிக்கு வர அறிவுறுத்தப்படுவதுடன், எஞ்சிய 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணி செய்ய வேண்டும்.
இது சுழற்சி முறையில் அமல்படுத்தப்படும். வீடுகளில் இருந்து பணிபுரிவோர், தொலைப்பேசியில் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். மேலும் அலுவல் கூட்டங்கள் கூடிய மட்டும் காணொலி மூலம் நடத்தப்பட வேண்டும்.
மிகவும் அத்தியாவசியம் என்றால் மட்டுமே பார்வையாளர்களுடனான சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டும். பணியிடங்களில் சானிடைசர் தெளித்து தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும். வரும் ஜனவரி 31வரை இந்த விதிமுறைகள் அமலில் இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.