சென்னை

மிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் தலைமைச் செயலக ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிகள் செய்ய அனுமதி கோரி உள்ளனர்.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.  இங்கு தினசரி பாதிப்பு 15000 ஐ தாண்டி உள்ளது.  இதையொட்டி தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  மீறுவோருக்கு கடும் அபராதம் விதிக்கப்படுகிறது.  வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

ஆனால் தமிழக தலைமைச் செயலகத்தில் அனைத்து ஊழியர்களும் பணி  புரிந்து வருகின்றனர்.  கடந்த வருடம் இதே நிலை ஏற்பட்ட போது 50% ஊழியர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பணி புரிய அனுமதிக்கப்பட்டனர்.    ஆனால் தற்போது பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில் தலைமைச் செயலகத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை குறித்து எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை.

இது குறித்து தமிழக தலைமைச் செயலக ஊழியர் சங்க முன்னாள் செயலர் வெங்கடேசன், “ஒவ்வொரு நாளும் தலைமைச் செயலகத்தில் இருந்து கொரோனா பரவல் குறித்த செய்திகளும் கட்டுப்பாடு விதிகளும் வெளியிடப்படுகின்றன. ஆனால் அதைத் தலைமைச் செயலகத்தில் பின்பற்றுவது இல்லை.  நிலைமை கட்டுக்கு மீறி அதிக ஆபத்தைச் சந்திக்கும் முன்பு இங்கு மீண்டும் சுழற்சி முறையில் பணி  புரிய அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் அதாவது  திங்கள் அன்று துணை செயலர் ஒருவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார்.  இது ஊழியர்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.  தமிழக பாதிப்பில் சுமார் 50% சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ளதால் அதிகாரிகளும் கடும் அச்சத்தில் உள்ளனர்.  இதனால் பல அரசு ஊழியர்கள்  விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளனர்.

குறிப்பாகத் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள நிதித்துறை போன்ற அலுவலகங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கடினமாக உள்ளதாக ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.   ஒரு ஊழியர் தனது இருக்கைக்கு வரவே பலரைத் தாண்டி வரவேண்டியதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.   தலைமைச் செயலகத்தில் அதிக பாதிப்பு நேரிடும் முன்பு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.