லண்டன்
பிரிட்டனில் உள்ள காவல் மையங்களில் அடைக்கப்பட்டோர் கொரோனா அச்சம் காரணமாக விடுவிக்கப்படுகின்றனர்.
பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்குதல் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகரித்து வருகிறது. இதுவரை 2,06,715 பேர் பாதிக்கப்பட்டு அதில் 30,0615 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதையொட்டி அங்குக் கண்காணிப்பு மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் காவல் மையங்களில் உள்ளவர்கள் சிறிது சிறிதாக விடுவிக்கப்படுகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் 16 முதல் ஏப்ரல் 21 வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் மையங்களில் இருந்து சுமார் 700 பேர் முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டனர். அதன் பிறகு இந்த காவல் மையங்களில் சிறிது சிறிதாக தங்கி உள்ளோர் விடுதலை செய்யப்பட்டு தற்போது 368 பேர் மட்டுமே உள்ளதாக கூறப்ப்டுகிறத். இவர்களில் அனுமதி இன்றி பிரிட்டனில் குடி புக முயன்றோர் அதிகம் உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் அனுமதி இன்றி பிரிட்டனில் குடி புக முயன்று காவல் மையங்களில் அடைக்கப்பட்ட வெளிநாட்டினரை இந்த கொரோனா பரவுதலை தவிர்க்க விடுவிக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதை லண்டன் உயர்நீதிமன்றம் மறுத்தது. ஆனால் தற்போது 13 பெண்கள் மட்டுமே உள்ள ஒரு காவல் மையத்தில் கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் மீதமுள்ள 12 பேரையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே காவல் மையங்களில் அடைக்கப்பட்டுள்ள மற்றவர்களும் விரைவில் விடுதலை செய்யப்பட்டு அனைத்து காவல் மையங்களும் காலியாகும் என கூறப்படுகிறது. இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்களில் பிரிட்டன் முகவரி உள்ளவர்கள் அவரவர் வீடுகளுக்கும் மற்றவர்களை வேறொரு முகாமில் தங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் பல வெளிநாட்டினருக்கு இட வசதி மற்றும் பணம் ஏதும் அளிக்காமல் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் முன் எச்சரிக்கை இன்றி முகாம்களில் இருந்து வெளியேறபட்டுள்ளன்ர். இதில் ஒரு சிலர் கொரோனா அச்சத்தின் காரணமாகத் தாமாகவே முன் வந்து வெளியேறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்த முகாம்களில் உள்ளவர்கள் நாள் முழுவதும் இந்த மையங்களின் அறைகளில் பூட்டப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாக முகாமில் இருந்து அனுப்பப்பட்ட ஒருவர தெரிவித்துள்ளார். தற்போது முகாமில் உள்ளவர்களில் பலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டும் அவர்களுக்கு முகவரி இல்லாததால் வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.