லடாக்
திங்கள் இரவு 20 வீரர்கள் பலி கொண்ட சீனப்படை தாக்குதலில் இந்திய ராணுவம் பாதிப்புக்கு கொரோனா பரவுதலும் காரணமாக இருந்துள்ளது.
இந்திய ராணுவம் வருடந்தோறும் கோடைக்கால கூட்டுப் பயிற்சி முகாம் ஒன்றை இந்திய திபெத் எல்லையில் நடத்துவது வழக்கம், இந்த வருடம் மார்ச் மாதம் இதில் கலந்துக் கொள்ள இருந்த வீரர்களில் சிலருக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டது. இதையொட்டி இந்தியா தனது பயிற்சியை நடத்தவில்லை.
இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய காலமான மார்ச் மாதத்தில் பல இடங்களில் கூட்டமாய் கூடுவது முழுவதுமாக தடை செய்யப்பட்டது. எனவே எல்லைப் பகுதிகளில் பயிற்சி முகாம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டதால் வழக்கமாக இங்கு காணப்படும் இந்தியப் படையினர் ஒருவரும் வரவில்லை. இது சீனாவின் படைகளுக்கு ஒரு உதவியாக அமைந்தது.
சீனாவும் தனது எல்லைப்பகுதியில் கோடைக்கால ராணுவப் பயிற்சி நடத்துவ்து வழக்கமாகும். அந்த நாடும் பயிற்சிகளைத் தள்ளி வைத்தது. அத்துடன் இந்த காலகட்டத்தை பயன்படுத்தி சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் குறிப்பாக கலவான பள்ளத்தாக்கில் வந்து முகாமிடத் தொடங்கினர். ஒரு சிலர் பாக்காங் ஏரிப் பகுதியில் முகாமிட ஆரம்பித்தனர்.
இதைத் தாமதமாக தெரிந்து கொண்ட இந்திய ராணுவம் கொரோனா தடை உத்தரவுகளை மீறி லடாக் பகுதியில் தனது வீரர்களை குவிக்கத் தொடங்கியது. ஆனால் ஏற்கனவே சீனப்படைகள் அங்கு ஏராளமாகக் குவிக்கப்பட்டதால் இது தாமதமான நடவடிக்கை ஆனது. சீனா அங்கு முதலில் நுழைந்து அதைத் தனது வெற்றி வாய்ப்பாக மாற்றத் தொடங்கியது.
அதன் பிறகு பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்த போது சீனா மேலும் மேலும் எல்லைப்பகுதியில் படைகளை குவித்ததாகவும், தற்போது எல்லையில் இருந்து செல்வதாகக் கூறியது நம்புவதற்கு இல்லை எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு பகுதியாக சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இதற்கு கொரோனா பரவுதலும் ஒரு காரணம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.