கொச்சி

ம்யூனிஸ்ட் யூனியன் ஊழியர்களை பணிக்கு வர விடாமல் தடுப்பதால் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் கேரள மாநிலத்திலுள்ள தங்களுடைய 346 கிளைகளை மூட உள்ளதாக அறிவித்துள்ளது.

பிரபல நகைக்கடன் நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்குக் கேரளாவில் 623 கிளைகள் உள்ளன. இவற்றில் 2800 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 70% பேர் பெண்கள் ஆவார்கள். இந்த நிறுவனம் தங்களிடம் சுமார் 20 வருடங்களுக்கு மேல் பணி புரியும் ஊழியர்களுக்கு ரூ.10000 மாத ஊதியம் வழங்குவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கம்யூனிஸ்ட்  தொழிற்சங்கமான சிஐடியு முத்தூட் ஃபைனான்ஸ் ஊழியர்களை உறுப்பினர்கள் ஆக்கி வந்தது. அத்துடன் பல ஊழியர்கள் இதில் இணைய விரும்பாத போதும் இணைய வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது. அத்துடன் நிறுவன நிர்வாகம் தங்கள் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு முத்தூட் நிர்வாகம் ஒப்புக் கொள்ள மறுத்துள்ளது. இதனால் தொழிற்சங்க பிரமுகர்கள் முத்தூட் கிளைகள் வாசலில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த தொழிற்சங்கத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்களையும்  பிரதிநிதிகள் பணிக்குச் செல்ல விடாமல் தடுப்பதாக நிறுவன பொது மேலாளர் பாபு ஜான் குறை கூறி வருகிறார். அத்துடன் கிளைகளைத் திறக்க வரும் ஊழியர்களுக்குத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டல் எழுப்பி வருவதாகவும் கூறி வருகிறார். இந்த நிலை நீடித்தால் கேரளாவில் உள்ள 623 கிளைகளில் 346 கிளைகளை நிரந்தரமாக மூடும் நிலை உண்டாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை சிஐடியு மற்றும் முத்தூட் ஃபைனான்ஸ் நிர்வாகத்தினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தக் கேரள தொழிலாளர் நல அமைச்சர் ராமகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து பாபு ஜான் தங்கள் நிறுவன சார்பில் இந்த பேச்சு வார்த்தைக்குப் போவது குறித்து முடிவு  எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தங்கள் ஊழியர்கள் உறுப்பினர் ஆக விரும்பாத தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த எதற்குப் போக வேண்டும் எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து சிஐடியு மாநில செயலர் கோபிநாத், “முத்தூட் நிர்வாகம் பணியாளர்களைப் போராடாமல் தடுக்க கிளைகளை மூட உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளது. எங்கள் சங்கத்தில் 1123 முத்தூட் ஊழியர்கள் மட்டுமே உள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் மற்றவர்களை நிர்வாகம் மிரட்டியதால் தொழிற்சங்கத்தில் இணையப் பயப்படுகிறார்கள். எங்களைப் பொறுத்த வரை மூத்தூட் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.