ஸ்ரீஹரிகோட்டா
இந்திய உளவுத்துறை தென் இந்தியாவில் கடல் வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக விடுத்த எச்சரிக்கையை ஒட்டி மீனவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
இந்திய உளவுத் துறை இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் தமிழகம் மற்றும் கடலோர மாநிலங்களில் ஊடுருவி உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தீவிரவாதிகள் கடல் வழியாக இந்தியாவின் தென் பகுதிகளில் ஊடுருவி உள்ளதாகவும் அவர்கள் குறிப்பாக ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி நிலைய செயற்கைக் கோள் ஏவுதளத்தில் நாச வேலைகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி தென் இந்திய நகரங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்ரீஹரிகோட்டாவில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இணைந்து உச்ச கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இங்குக் கண்காணிப்புத் துறையில் கடும் கெடுபிடி உண்டாகி உள்ளது.
இப்பகுதி கடலோரத்தில் அமைந்துள்ளது. உளவுத் துறை எச்சரிக்கையின் படி தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே கடலோரக் காவல் படையினர் மீனவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் பல மீனவர்களைத் தனியே அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். இதனால் மீனவர்கள் கடும் துயருற்றுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.