திருப்பதி

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் அலிபிரி நடைபாதையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

File pic

கொரோனா பரவல் காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.   அவ்வகையில் அலிபிரி நடைபாதை முழுவதுமாக மூடப்பட்டது.   மேலும் இந்த அடைப்பின் போது பல புனரமைப்பு பணிகள் நடந்துள்ளன.  தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிறிது சிறிதாகத் தளர்வுகள் அமலாகி வருகின்றன.

அலிபிரி நடைபாதையில் உள்ள மேற்கூரை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.  அதை நேற்று திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஜவகர் பார்வையிட்டார்.   அவர் செய்தியாளார்களிடம், “திருப்பதியில் அலிபிரியில் இருந்து கோவில் வரை நடைபாதை மேற்கூரை நன்கொடையாளர்கள் உதவியுடன் புனரமைக்கப் பட்டுள்ளது.

இதையொட்டி வரும் அக்டோபர் 7 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ள பிரம்மோற்சவத்தின் போது ஆன்லைன் மூலம் டிக்கட் பெற்ற பக்தர்களுக்கு நடைபாதை மூலம் பாதயாத்திரை செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.  நடை பாதை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு பாத யாத்திரை செல்ல வசதியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.