பெங்களூரு
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பாஜக அமளி செய்ததால் ஆளுனர் தனது உரையில் பாதியில் நிறுத்தி விட்டு வெளியேறி உள்ளார்.
நேற்று கர்நாடக மாநில சட்டப்பேரவையான பெங்களூரு விதான் சவுதாவில் நிதிநிலை அறிக்கைத் தொடர் தொடங்கியது. முதல் நாளான நேற்று முதல் நிகழ்வாக ஆளுநர் உரை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படிநேற்று கர்நாடக மாநில ஆளுநர் வஜுபாய் வாலா உரையை வாசிக்க தொடங்கினார்.
அவர் உரையை வாசிக்க தொடங்கியதுமே பாஜக உறுப்பினர்கள் எழுந்து நின்று அவையில் கோஷம் இட்டனர். அதன் பிறகு அவையின் மையப் பகுதிக்கு வந்து கர்நாடக மாநில காங்கிரஸ் – மஜத கூட்டணிக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். அத்துடன் கூட்டணி அரசுக்கு போதிய ஆதரவு இல்லாததால் அரசை கலைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பாஜகவினரின் அமளியால் ஆளுநர் மிகவும் அதிருப்தி அடைந்தார். அதனால் அவர் தனது உரையை பாதியிலேயே நிறுத்தி விட்டு அவையை விட்டு வெளியேறினார். ஆயினும் பாஜகவினர் அமளியை நிறுத்தவில்லை. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர், ”அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய விடாமல் தடுக்க பாஜக முயல்கிறது. அத்துடன் அவை முடக்கத்தின் மூலம் கர்நாடக அரசுக்கு போதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு இல்லை என காட்ட முயல்கிறது. அதன் மூலம் ஆட்சியைக் கலைக்க பாஜக திட்டமிட்டுள்ள்து” என தெரிவித்துள்ளார்.