சென்னை
மோசமான வானிலை காரணமாக ஐதராபாத் விமானம் தாமதம் ஆனதால் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராராஜன் உள்ளிட்டோர் அவதிப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு ஐதராபாத் நகரில் மிகவும் மோசமான வானிலை ஏற்பட்டது. இதனால் திருப்பதியில் இருந்து ஐதராபாத் சென்ற விமானம் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. சுமார் 69 பயணிகளுடன் திருப்பதியில் இருந்து ஐதராபாத் சென்ற விமான இரவு 11 மணிக்குச் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதிகாலை ஒரு மணிக்கு வானிலை சீரானதால் ஐதராபாத் சென்றது.
இதைப் போல நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டி இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் அதிகாலை 11 மணிக்குச் சென்னை வந்தது. அதில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 169 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
தவிர நேற்று முன் தினம் இரவு 10 மணிக்குச் சென்னையில் இருந்து 129 பயணிகளுடன் ஐதராபாத் செல்ல வேண்டிய ஏர் ஏசியா விமானமும் தாமதமாக கிளம்பியது. இந்த விமானம் 2 மணி நேரம் தாமதமாகி நள்ளிரவு 12 மணிக்குச் சென்னையில் இருந்து கிளம்பியது. இந்த இரு சம்பவங்களால் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகினர்.