டில்லி
பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாள் அடைப்பால் கொரோனா அழியாது எனவும் மக்கள் பட்டினியால் மரணம் அடைவார்கள் எனவும் தி பிரிண்ட் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தியா தற்போது கொரோனா பாதிப்பில் இரண்டாம் நிலையில் உள்ளது. அந்த வைரஸ் பரவுதலை தடுக்க பிரதமர் மோடி கடந்த 22 ஆம் தேதி மக்கள் ஊரடங்கு நடத்த வேண்டுகோள் விடுத்தார். தற்போது நாடு முழுவதும் 21 நாள் முழு அடைப்பை அறிவித்துள்ளார். இதனால் பலருக்கு வாழ்வாதாரம் பாதிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பிரபல ஆங்கில ஊடகமான தி பிரிண்ட் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில், ”சிங்கப்பூர், தைவான், ஜெர்மனி மற்றும் துருக்கி போன்ற பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கும் முழு ஊரடங்கு அல்லது அடைப்புக்குப் பதிலாக வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். சீனாவிலும் வுகான் பிராந்தியம் மட்டுமே மூடப்பட்டதே தவிர நாடு முழுவதும் மூடப்படவில்லை.
ஆனால் நமது பிரதமர் மோடி 130 கோடி மக்களை ஊரடங்கு என்னும் முழு அடைப்பில் வைத்துள்ளார். அரசு அதிகாரிகள் இதை ஊரடங்கு என அழைப்பதால் நாமும் இதைத் தேசிய ஊரடங்கு எனவும் அழைக்கலாம்.
இந்த தேசிய ஊரடங்கால் இந்த உயிர்க்கொல்லி வைரஸ் பரவுவது வெகுவாக குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் பிறகு என்னவாகும்? அதன்பிறகு இந்த வைரஸ் மறைந்து விடாது. இதற்குத் தடுப்பு மருந்து தேவைப்படும். அந்த தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்த பிறகு அதை அத்தனை இந்தியருக்கும் செலுத்தப் பல மாதங்கள் ஆகும். சுருக்கமாகச் சொன்னால் சில வருடங்கள் ஆகும்.
எனவே மற்ற நாடுகளைப் போல் இந்தியாவும் தேசிய ஊரடங்குக்குப் பதில் சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி இருக்கலாம். இந்தியாவின் தேசிய ஊரடங்குக்குப் பதில் சரியான சோதனை உட்கட்டமைப்பை அமைத்து அனைவரையும் சோதித்து அறிகுறி உள்ளோரை தனிமைப்படுத்தி இருக்கலாம். இதன் மூலம் மட்டுமே தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.
பிரதமர் மோடி தனது இரு உரைகளிலும் இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா சோதனை குறித்து எதுவும் சொல்லாதது துரதிருஷ்ட வசமானதாகும். நமக்கு இப்போது விரைவான மற்றும் மலிவான சோதனைகள் தேவை. அது மட்டுமின்றி இதில் பாதிப்பு உள்ளதாகக் கண்டறியும் ஆண் பெண் அனைவரும் உடனடியாக் தனிமைப்படுத்தி மற்றவருக்கு இது பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் மிகமிக அவசியம் ஆகும்.
ஆனால் இது குறித்து மோடி அரசு எவ்வித யோசனையும் நடத்தவில்லை என்பது தெளிவாகி உள்ளது. இந்த 21 நாள் தேசிய ஊரடங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மற்றும் சோதனைகள் மேம்படுத்துதல் குறித்து எவ்வித திட்டமிடலும் இல்லை என்பதும் தற்போதைய நிலையில் தெளிவாக தெரிகிறது. ஒரே நாளில் சோதனை சாதனங்கள், தொண்டு புரிவோர் ஆகியோரை உருவாக்க முடியாது என்பதை அரசு இதுவரை உணரவில்லை.
ஒருவேளை நாம் வைரஸிலிருந்து தப்பித்தாலும் பொருளாதார சீரழிவில் இருந்து தப்ப முடியாது. கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ள சமயத்திலும் மோடி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். எனவே அவர் ஏன் பொருளாதாரத்தைப் பற்றி கவலைப்படப் போகிறார்?
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றின் வரிசையில் சரியாகத் திட்டமிடப்படாத தேசிய ஊரடங்கும் வர்த்தகத்தை கடுமையாகப் பாதிக்கக்கூடும்.
சிறிதும் கால அவகாசமின்றி மோடி தேசிய ஊரடங்கை அறிவித்துள்ளார். இரவு எட்டு மணிக்கு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பணமதிப்பிழப்பைப் போல அன்று நள்ளிரவு அமலாகி உள்ளது. அவர் ஏன் இந்த அறிவிப்பைக் காலை 8 மணிக்குத் தொலைக்காட்சியில் அறிவித்திருக்கக் கூடாது. பிரதமர் உரைக்கு பிரைம் டைம் தேவை இல்லை.
வீதியில் நடமாடுவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உள்துறை அமைச்சகம் பல விளக்கங்கள் அளித்துள்ளன. ஆனால் இந்தியக் காவல்துறைக்கு இந்தியர்களை லத்தியால் அடிப்பதுதான் மிகவும் பிடித்ததாகும். இந்த திடீர் ஊரடங்கால் பல லாரிகள் மாநில எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பல அத்தியாவசியப் பொருட்களும் உள்ளன
தற்போது ராபி பயிர்களுக்கான அறுவடைக் காலம் என்பதை பிரதமர் அலுவலகம் அறியவில்லை என தோன்றுகிறது. தேசிய ஊரடங்கால் விவசாயிகள் அறுவடை செய்ய இயலாத நிலையுள்ளது. அது மட்டுமின்றி பல முக்கிய மருந்துகள் கிடைக்க அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்பது குறித்தும் மோடி தெரிவிக்கவில்லை.
பிரதமர் இன்னும் பொருளாதார உதவி குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. அவர் இதுவரை கொரோனா பாதிப்புக்காக ரூ.15000 கோடி உதவி செய்ய உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் தேவையற்ற திட்டமான நாடாளுமன்ற கட்டிடத்தை புதிதாகக் கட்ட ரூ.20000 கோடி அதாவது கொரோனா நிவாரணத்தை விட ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்நிலை மேலும் தொடர்ந்தால் இந்தியர்கள் கொரோனாவால் மட்டுமல்ல பட்டினியாலும் மடிவார்கள். மோடியின் சரியான நிர்வாகத் திறமை இன்மையாலும், விவரங்களைக் கவனிக்காததாலும், தற்போதைய நிலையின் தீவிரத்தை கண்டு கொளததாலும் இந்த பட்டினி சாவு நேரிடும். இன்னும் சில வாரங்களில் நாம் கொரோனா வைரஸ் முறியடிப்பிலும், பொருளாதார சீர்கேட்டிலும் கடும் தோல்வியைச் சந்தித்து 1980களில் நிலையை அடைவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.