ஐதராபாத்: துபாய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கான மருத்துவமனை கட்டணம் ரூ.1 கோடியே 52 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது மட்டுமின்றி, அவருக்கு இலவச விமான டிக்கெட் வழங்கப்பட்டு, ரூ.10000 பணமும் அளிக்கப்பட்டு, தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவின் ஜக்தியால் மாவட்டத்தின் வேனுகுமட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான ஒட்னலா ராஜேஷ். இவர், கடந்த ஏப்ரல் 23ம் தேதி துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர், மொத்தம் 80 நாட்கள் சிகிச்சையில் இருந்தார். அதன்பிறகு, அவருக்கு ரூ.1 கோடியே 52 லட்சம் என்ற தொகைக்கு மருத்துவமனை சார்பில் பில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அவர் சார்பாக, இந்திய துணைத் தூதரகத்திடம் உதவி கேட்கப்பட்டது. பின்னர், தூதரகம் சார்பில், மனிதாபிமான அடிப்படையில் கட்டணத் தொகையை தள்ளுபடி செய்யுமாறு மருத்துவமனைக்கு கடிதம் எழுதப்பட்டது. இதனை ஏற்ற மருத்துவமனை நிர்வாகம், கட்டணத் தொகையை தள்ளுபடி செய்தது.
பின்னர், தன்னார்வலர்கள் சார்பில், அவருக்கு இலவச விமான டிக்கெட் ஏற்பாடு செய்யப்பட்டு, ரூ.10000 பணமும் வழங்கப்பட்டு, தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.