சென்னை:
“கன்னியாகுமரியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஹிமாம் பாதுஷா என்பவரால் ஏமாற்றப்பட்டு துபாயில் தவித்துக்கொண்டிருக்கிறோம். எங்களை ஊருக்கும் வர விடாமல் செய்துவிட்டார்கள். இந்த நிலை தொடர்நதால் நாங்கள் நால்வரும் தற்கொலை செய்துகொள்வோம்” என்று கதறுகிறார்கள் கன்னியாகுமரியைச் சேர்ந்த நான்கு தொழிலாளிகள். தங்களைப் போல மேலும் பலரை ஏமாற்றி ஹீமாம் பாதுஷா துபாய்க்கு வேலைக்கு அனுப்பி தவிக்கவிட்டுள்ளார் என்றும் புகார் கூறுகிறார்கள்.
துபாயில் தவிக்கும் இளைஞர்கள்
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அருண், விஜய், வேலூரைச் சேர்ந்த துளசி, மற்றும் நெல்லையைச் சேர்ந்த உதிராமலை ஆகியோர் துபாயில் இருந்து நம்மை தொடர்புகொண்டு கதறலுடன் பேசினார்கள்.
“எங்கள் நால்வருக்கும் துபாயில் எலக்ட்ரிசியன் வேலை வாங்கித் தருவதாக கன்னியாகுமரியைச் சேர்ந்த ஹிமாம் பாதுஷா எனற ஏஜென்ட் பணம் கேட்டார். அவர் அ.தி.மு.க.வில் சிறுபான்மை பிரிவில் பொறுப்பு வகிக்கிறார். தவிர ஏற்கெனவே வெளிநாட்டில் பலருக்கு வேலை வாங்கித்தந்திருப்பதாகவும் நம்பிக்கையூட்டினார். ஆகவே கடன் வாங்கி நாங்கள் நால்வரும் அவருக்கு ருபாய் நான்கு லட்சத்தி இருபதினாயிரம் ரூபாய் பணம் தந்தோம்.
துபாயில் சிட்டி டெக் டெக்கனிக்கல் சர்வீசஸ் என்ற நிறுவனத்தில் எலக்ட்ரிசியன் வேலை என்றார். நம்பிக்கையோடு துபாய் சென்றோம். ஆனால் அந்த நிறுவனத்தினர் எங்களை மண்வெட்டும் வேலை பார்க்கச் சொன்னார்கள். சொன்ன வேலையை விட்டு வேறு வேலை பார்த்தால் துபாய் போலீஸ் கைது செய்துவிடும். ஆகவே மறுத்தோம். ஆனால் எங்களது பாஸ்போர்ட், எமிரேட்ஸ் ஐ.டி., லேபர் கார்டு, வங்கி ஏ.டி.எம். கார்டு, வேலை நியமன ஒப்பந்த நகல் ஆகியவற்றை பறித்துக்கொண்டார்கள். மேலும் எங்களை அடித்து உதைத்து மண்வெட்டும் வேலை பார்க்க வைத்தார்கள். அதற்கு நேரம்காலம் கிடையாது. கொத்தடிமை வேலைதான்.
பொறுக்க முடியாமல், பலரிடம் கெஞ்சி பணம் பெற்று துபாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டோம். அவர்களும் நாங்கள் ஓடிவிட்டதாக பொய் வழக்குப் போட்டுள்ளனர்.
இப்போது எங்களுக்கு வேலை இல்லை. தங்க இடமும் இல்லை. ஒரு மாத காலம் பிச்சைக்காரர்களைப்போலவே வாழந்தோம். இரவில் பூங்காக்களில் படுப்போம்.
இப்போது நண்பர் ஒருவர் தனது அறையில் எங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறார். ஆனால் அவரே சாதாரண லேபர். சம்பளம் குறைவு. அவரை சிரமமப்டுத்தக்கூடாது என்பதால் நாங்கள் நால்வரும் ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் உணவு உண்கிறோம். எங்கள் போன்களை மட்டும் யாரிடமாவது சொல்லி ரீசார்ஜ் செய்யச் சொல்வோம். ஏனென்றால் எப்படியாவது நல்ல தகவல் வராதா எனறு.
இந்த சூழ்நிலையிலும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருப்பது, எப்படியாவது ஊர் வந்து சேரவேண்டும் என்பதற்காகத்தான்” என்றார்கள்.
மேலும், “எங்களையும் துபாய் நாட்டிலிருந்து மீட்டு அரசு செலவில் இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் நால்வரும் தற்கொலை செய்துகொள்வோம். ஏனென்றால் இங்கேயே இருந்தால் பட்டியினியால் செத்துவிடுவோம். அதற்கு பதிலாக தற்கொலை செய்துகொள்வதே மேல் என்று தீர்மானித்திருக்கிறோம்.!” என்று கதறுலுடன் கூறினார்கள் அந்த அப்பாவித்தொழிலாளிகள்.
“நாங்கள் நால்வர் மட்டுமல்ல.. அந்த சிட்டி டெக் டெக்கனிக்கல் சர்வீசஸ் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான இந்தியத் தொழிலாளிகள் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்படுகிறார்கள். ஊதியம் கேட்டு போராடிய தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு தொடர்ந்து சிறையிலும் அடைத்துள்ளனர். அதில் பலர் தமிழர்கள்.
இந்த நிறுவனத்த நடத்துபவர்கள் கேரளாவை சேர்ந்த ஷிபு என்ற ஸ்டான்லி வர்கீஸ், செரின் லாரன்ஸ் மற்றும் பங்களாதேஷை சார்ந்த அப்துல் ஜலீல் ஆகியோர். இவர்களால் நூற்றுக்கணக்கான இந்திய தொழிலாளிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலை பார்க்க நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களை அனுப்பி வருபவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஹிமாம் பாதுஷாதான்” என்றார்கள்.
அதோடு, “எங்களை ஏமாற்றி அனுப்பிய ஹிமாம் பாதுஷாவிடம் போன் செய்து கேட்டபோது, அவர் தகுந்த பதில் சொல்லவில்லை. அதன் ஆடியோ பதிவும் இருக்கிறது. அதோடு எங்கள் சார்பாக குடும்பத்தினர் கன்னியாகுமரியில் அவரை சந்தித்தபோது, விரைவில் மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் இல்லையெனில் ஊருக்குத் திரும்ப ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். ஆனால் இரண்டு மாதங்களாக உயிர் வேதனையில் தவிக்கிறோம்” என்றனர் அந்த இளைஞர்கள்.
இதையடுத்து ஹிமாம்பாதுஷாவிடம் பேச அவரது எண்ணுக்கு தொடர்ந்து முயற்சி செய்தோம். சுவிட்ச்ட் ஆப் என்றே வந்தது.
மேற்கண்ட நான்கு இளைஞர்கள் மட்டுமின்றி இன்னும் பலரும் துபாயில் சிட்டி டெக் டெக்கனிக்கல் சர்வீசஸ் நிறுவனத்தால் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
உண்ண உணவின்றி தங்க இடமின்றி இரண்டு மாதங்களாக துபாயில் தவித்துவரும் அந்த இளைஞர்களின் எண்கள்:
உதிராமலை, மொபைல் எண்: 00971 – 563956063
அருண், மொபைல் எண்: 00971 – 559935360
துளசி, மொபைல் எண்: 00971 – 551198930
விஜய், மொபைல் எண்: 00971 – 5655145736.
துபாயில் தவிக்கும் தமிழ் இளைஞர்களைக் காக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு இந்திய அரசும் அந்த அப்பாவி இளைஞர்களின் நிலையை கவனத்தில் கொண்டு அவர்கள் இந்தியா திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.
தற்கொலை எண்ணத்தில் இருக்கும் அவர்களை ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன், தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.