
டில்லி
பொது இடத்தில் புகைபிடிப்பதை கண்டித்த ஒரு மாணவரை குடிகார வழக்கறிஞர் காரேற்றி கொன்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதிந்தாவை சேர்ந்த இளைஞர் குர்பிரீத் சிங் (வயது 21). இவர் டில்லியில் புகைப்படக் கலை பற்றி படித்து வருகிறார். இவர் திங்கட்கிழமை அன்று எய்ம்ஸ் மருத்துவமனை அருகில் உள்ள ஒரு சாலையோரக் கடையில் தனது நண்பர் மனீந்தர் சிங் என்பவருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அருகிலிருந்த ரோஹித் கிருஷ்ண மகந்தா என்னும் வழக்கறிஞர் அதே இடத்தில் புகை பிடித்துக் கொண்டிருந்தார். பொது இடத்தில் புகை பிடிக்கக் கூடாது என குர்பிரீத் அவரிடம் சொல்ல, அவர் மறுக்க வார்த்தகள் தடித்துள்ளன.
ரோஹித் கோபத்தில் கண்டபடி திட்டி உள்ளார். நண்பரின் அறிவுறுத்தலின் பேரில் குர்பிரீத் மேலும் சண்டையை வளர்க்காமல் அந்த இடத்திலிருந்து நண்பருடன் தனது மோட்டார் சைக்கிளில் கிளம்பி விட்டார். ஆனால் கோபம் குறையாத மகந்தா தனது காரில் ஏறி அந்த பைக்கை வேண்டுமென்றே இடித்து மோதித் தள்ளியுள்ளார். பைக்கில் இருந்த இருவரும் கீழே விழுந்த பின்னரும் விடாமல் மோதி உள்ளார், பிறகு அருகில் இருந்த ஆளில்லா ஆட்டோவில் மோதி வாகனம் நின்றுள்ளது.
அங்கு கூடிய பொது மக்கள் அடிப்பட்ட இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு கோமாவில் இருந்த குர்பிரீத் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். படுகாயம் அடைந்த மணீந்தர் சிகிச்சை பெற்று வருகிறார். பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய வழக்கறிஞரை போலீஸ் மீட்டு கைது செய்தனர். குடிபோதையில் தள்ளாடிக் கொண்டிருந்த மகந்தாவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் அவர் குடித்திருந்ததை உறுதிப் படுத்திக் கொண்டனர்.
முதலில் சாதாரண வாகன விபத்தாக வழக்கு பதியப்பட்டு வழக்கறிஞர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். பின்பு குர்பிரீத் மரணம் அடைந்த பின் அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே சுய நினைவுக்கு வந்த மணீந்தர் நேற்று அனைத்து மீடியாக்களிலும் இது விபத்து அல்ல என்றும் வேண்டும் என்றே செய்யப்பட்ட கொலை எனவும் பேட்டி அளித்துள்ளார். அந்த செய்தி வைரலாக பரவவே மகந்தா மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
[youtube-feed feed=1]