பெங்களூரு:
கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏவான சி.டி. ரவி, குடிபோதையில் கார் ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஆனால், விபத்தை ஏற்படுத்திய எம்எல்ஏ சி.டி. ரவி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி, மருத்துவ மனையில் உள் நோயாளியாக சேர்ந்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநில சிக்மகளூர் பாஜக எம்.எல்ஏ. சி.டி. ரவி எனப்படும் சிக்கமகரவல்லி திம்மே கவுடா ரவி. இவர் நேற்று தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அவரது கார் ஹசன் நெடுஞ்சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்தபோது, நிலை தடுமாறி, சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்களும் பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையறிந்த எம்எல்ஏ சி.டி.ரவி, தனக்கு நெஞ்சு வலிப்பதாக நாடகமாடி, உடனடியாக அங்கிருந்து தப்பி பெங்களூருவில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்ந்துகொண்டார்.
இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்தை ஏற்படுத்திய பாஜஎ எம்எல்ஏ சிடி ரவி மற்றும் அவரது நண்பர்கள் குடிபோதையில் இருந்தாக கூறப்படுகிறது.
விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், எம்எல்ஏ ரவி மற்றும் அவரது நண்பர்கள் குடிபோதையில் இருந்ததாகவும், அவரது கார் வேகமாக வந்து, சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மோதியதாகவும், விபத்துக்கு காரணம் எம்எல்ஏ ரவிதான் என்றும் குற்றம் சாட்டி உள்ளனர்.
பாஜக எம்எல்ஏவான சி.டி.ரவி, தமிழக பாஜகவுக்கு நியமிக்கப்பட்டுள்ள மேலிட பொறுப்பாளர் களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.