சென்னை: திமுக முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனியின் அலுவலத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போதைப்பொருட்கள் கொரியர் மூலம் கடத்தப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், கொரியல் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, இன்று பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை சென்னை பல்லாவரத்தில் இருக்க கூடிய எஸ்.டி. கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எஸ்.டி. கொரியர் நிறுவனமானது ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனிக்கு சொந்தமானது. தற்போது ராமநாதபுரத்தில் மீண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராகவும் நவாஸ் கனி அறிவிக்கபட்டுள்ளார். இந்த நிலையில், அங்கும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
போதை பொருள் கடத்தல் காரணமாக சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ள அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், நவாஸ் கனி அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. அதேபோல் பல்லாவரத்தில் மற்றொறு ஹோட்டல் உரிமையாளர் ரியாஸ் என்பவரது அலுவலகத்திலும் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரியர் நிறுவனங்கள் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவதாகக் கூறப்படுவதை அடுத்து கேரளாவில் பிரபல கொரியர் நிறுவனங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் எஸ்டி கொரியர் நிறுவனத்தில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.