சென்னை: முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் மீதான போதைபொருள் கடத்தல் வழக்கில்,  இயக்குனர் அமீர் உள்பட 12 பேர்மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே  மத்திய போதை பொருள் தடுப்பு காவல்துறை  வழக்குகள் பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல போதை பொருள் கடத்தல் மன்னாக திகழ்ந்த, முன்னாள் திமுக நிர்வாக ஜாபர் சாதிக் மத்திய போதை பொருள் தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர், ரூபாய் 2000 கோடிக்கு அதிகமாக வெளிநாடுகளுக்கு போதை பொருட்களை கடத்தியது தெரிய வந்தது. இதன் மூலம் சம்பாதித்த பணத்தை, தமிழ்நாட்டில் திரைப்படம் எடுக்கவும், ஓட்டல்கள் கட்டியது உள்பட பல்வேறு இடங்களில் முதலீடு செய்துள்ளார்.

முன்னதாக போதை பொருள் கடத்தல் தொடர்பாக, தமிழகத்தை சேர்ந்த 3 பேரை போதை பொருள் வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் மூளையாக செயல்பட்டது ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. அவர் ஒரு சினிமா தயாரிப்பாளர் மற்றும் திமுகவின் முக்கிய உறுப்பினர். இவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டடர்ர். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து திமுக தலைமை நீக்கி நடவடிக்கை எடுத்தது.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட ஜாபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கும்   இயக்குனர் அமீருக்கும் தொடர்பு இருப்பது உறுதியானது. மேலும் திரையுலகை சேர்ந்த பலரிடமும் ஜாபர்  உடன் நெருக்கம் காட்டியதுடன்,  முதலமைச்சர் ஸ்டாலின்,  அமைச்சர் உதயநிதி உள்பட பலரை சந்தித்துள்ளதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இயக்குனர் அமீர் உள்பட 12 பேர்மீது  அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த குற்ற பத்திரிக்கையில் ஜாபர் சாதிக், அவருடைய மனைவி அமீனா பானு, சகோதரர் முகமது சலீம் மற்றும் அவருடைய தயாரிப்பு நிறுவனம் போன்றவைகள் சேர்க்கப்பட்ட நிலையில் 12வது நபராக இயக்குனர் அமீர் சேர்க்கப்பட்டுள்ளார். இயக்குனர் அமீர் உட்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குற்ற பத்திரிக்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை அனுமதி கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.