சென்னை: மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை செய்து வந்த வடமாநில இளைஞர்கள் 3 பேர் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னையில் பல்வேறு இடங்களில் போதை பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அருகே மற்றும் குடிசை பகுதிகள், பூங்காங்கள், கடற்கரை பகுதிகளில் போதை பொருள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் பெண்கள் கூட போதை பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். இதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக கூறி வந்தாலும், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களே ஈடுபட்டு வருவதால், காவல்துறையினர் தங்களது பணிகளை செய்ய முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில், சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரம் அருகே குடிசை வீட்டில் ஹெராயின் போதைப் பொருள் பதுங்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மாறுவேடத்தில் சென்ற பட்டினம்பாக்கம் தனிப்படை போலீசார் போதை பொருள் வாங்குவது போல நடித்து ஒருவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இரண்டு பேர் தப்பியோட முயன்ற போது இருவரையும் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். பின்னர் குடிசை வீட்டில் ஆய்வு மேற்கொண்ட போது ஓலையில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில், 17.5 கிராம் ஹெராயின் போதை பொருளை போலிசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் 3 பேரும் வடமாநிலத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள், அவர்களின் பெயர்கள், அலி 25, அசீஸ் 26, இம்ரான் அலி 28 என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்த முதற்கட்ட விசாரணையில் ஹெராயின் போதை பொருளை அசாம் மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களிலும் சென்னையிலும் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.