சென்னை: போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கும் வகையில் முதலமைச்சர் தலைமையில்  கல்லூரி  மாணவ மாணவிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றார். தொடர்ந்து, நடப்பாண்டுக்கான காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கினார்.

சென்னை சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில்  இன்று நடைபெற்ற  நிகழ்ச்சியில்,  போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியினை சுமார் 1500 கல்லூரி மாணவ, மாணவியர் கள் ஏற்றுக் கொண்டனர்.  தொடர்ந்து,  2024-ம் ஆண்டிற்கான காவலர் சிறப்பு பதக்கங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல் துறையினருக்கு வழங்கி கவுரவித்தார்.

தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிற்து. அதன் தொடர்ச்சியான போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்முறை கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்றைய தினம் போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியினை சுமார் 1500 கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஏற்றுக் கொண்டனர். இதே போல் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து,  மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பான பணியாற்றியதற்காக 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை, தேனி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சிவபிரசாத், சேலம், மத்திய புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜகன்னாதன், சென்னை, மத்திய புலனாய்வுப் பிரிவு, சார்-ஆய்வாளர் ராஜ் குமார், மதுரை மாவட்டம், ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்-ஆய்வாளர் அருண், ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலைய முதுநிலை காவலர் துரை ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று மாநிலம் முழுவதும் கைப்பற்றப்பட்ட சுமார் 13,775 கிலோ போதைப் பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் செங்கல்பட்டு, சேலம், தஞ்சை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தகுந்த பாதுகாப்புடன் எரித்து அழிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தயாநிதி மாறன் எம்.பி., தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவா சிர்வாதம், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், அமலாக்கப் பணியகம்-குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் அமல்ராஜ் மற்றும் காவல துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.