டில்லி
மத்திய அரசு ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க உள்ளதாக உச்சநீதிமன்றத்துக்கு அரிவித்துள்ளது.
சமீப காலங்களில் சாலை விபத்துகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் திறமையற்ற ஓட்டுனர்களே எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்துக்கு காரணமான பல ஓட்டுனர்களிடம் உள்ள ஓட்டுனர் உரிமங்கள் போலியானவை எனவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது குறித்து உச்ச நீதிஅன்றத்தில் ஒரு வழக்கு நடந்துக் கொண்டு உள்ளது.
உச்சநீதிமன்றம் போலி உரிமங்களைக் கண்டுபிடிக்கவும் அவைகளை தடுக்கவும் மத்திய அரசு தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசு இது குறித்து பதில் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்துக்கு அளித்துள்ளது.
அந்த மனுவில் ”தேசிய தகவல் மையம் சாரதி 4 என்னும் மென் பொருள் ஒன்றை உருவாக்கி வருகிறது. அதன் மூலம் அனைத்து ஓட்டுனர் உரிமங்களும் ஆதார் எண்ணுடன் இணைக்கப் படும். இவ்வாறு இணைப்பதன் மூலம் போலி உரிமங்கள் உபயோகப்படுத்துவது முழுவதுமாக நிறுத்தப்படும்.
இந்த மென்பொருள் மூலம் அனைத்து மாநில போக்குவரத்து அலுவலகங்களின் உரிமங்கள் பற்றிய விவரங்களும் அறிந்துக் கொள்ள இயலும். எனவே யாராவது போலி உரிமம் வைத்திருந்தால் அதை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். இந்த மென்பொருள் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு ஆதார் இன்னும் கட்டாயம் ஆக்கப்படவில்லை எனக் கூறி உள்ள நேரத்தில் இது போல மத்திய அரசு அறிவித்திருப்பது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.