டெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தனியார் மயம் ஆக்கப்படுமா என்ற மதிமுக எம்பி வைகோவின் கேள்விக்கு, தனியார் மயம் ஆக்கப்படாது மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் உறுதி அளித்தார்.
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. இதையடுத்து மாநிலங்களவையில், கேள்வி நேரத்தின்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் வைகோ மற்றும் சண்முகம் பாதுகாப்புத்துறை தனியார் மயம் ஆகுமா? பாதுபாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் விவரங்கள் என்ன? என்பது உள்ளிட்ட சில கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் அளித்த எழுத்து மூலமாக பதில் அளித்தார். அதில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தனியார் மயம் ஆகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ஏவுகணை அமைப்புகள், தாக்குதல் வான் ஊர்திகள், உடனடிப் பாலங்கள் அமைத்தல் மற்றும் பதுங்கு குழிகள் வெட்டுதல், பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள், மேம்பட்ட கண்ணி வெடிகள் மற்றும் நீரில் மூழ்கிய பொருட்களை, ஒலி அலைகள் கொண்டு அறியும் முறை உள்பட பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.