அரியலூர்: திராவிட கட்சிகள் தங்களது பிள்ளைகளுக்கு மட்டும் இந்தி பாடத்தைக் கற்றுக்கொடுக்கின்றன, ஆனால், ஏழை மக்கள் இந்தி படிப்பதை தடுக்கின்றன என இந்திய ஜனநாயக கட்சி தலைவரான பாரிவேந்தர் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து உள்ளார். திமுக கூட்டணியில் இருந்து அவர்களது ஆதரவுடன் எம்.பி.யானவர் பாரிவேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில், மத்தியஅரசு இந்தியை திணிப்பதாக கூறி, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. மேலும், சட்டமன்றத்திலும் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் வரும் 4ந்தேதி திமுக மாநிலம் முழுவதும் எந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.
இதிற்கிடையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிரான பாஜக மாநிலம் முழுவதும், பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அங்கிலத்தை வளர்ப்பைவிட்டு, தமிழை வளருங்கள் என்று வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில், சமூக வலைதளங்களில், அதிமுக, திமுக உள்பட அரசியல் கட்சியினர் நடத்தும் கல்வி நிலையங்களில், இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் தகவல்களும் வெளியாகி, திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றும் செயலை வெளிச்சம் போட்டுகாட்டி வருகின்றன.
இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் கீழமிக்கேல்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் மட்டும் இந்தியில் பேசவோ, மற்றவர்கள் பேசுவதை புரிந்துகொள்ளவோ முடியாமல் சிரமப்படுகின்றனர் என்று கூறியவர், இந்தி எதிர்ப்பு தீர்மான பொதுக்கூட்டங்களை நடத்தும் திராவிட கட்சிகள் தங்களைச் சார்ந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இந்தி பாடத்தைக் கற்றுக் கொடுத்து வருகின்றனர். அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் இந்தியை கற்றுக் கொடுக்கின்றனர் என்பதை அம்பலப்படுத்தினார்.
ஆனால், தமிழக மக்கள், ஏழை, எளிய மக்களை இந்தி படிக்க விடாமல் அவர்கள் தடுத்து அரசியல் செய்கின்றனர் என்று நேரடியாக குற்றம் சாட்டினார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து, எம்.பி.யாக தேர்வானவர். இவர் ஏற்கனவே, இந்தி படிக்கச் சொல்வதை, இந்தி திணிப்பாக பார்க்கக்கூடாது, இன்னொரு மொழியை படிக்கக் கிடைக்கும் வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்றும் கூறி இருந்த நிலையில், தற்போதும், திராவிட கட்சிகளுக்கு எதிரான பேசியிருப்பது, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐஜேகே கட்சி நிறுவனரும், பெரம்பலூர் எம்.பியுமான பாரிவேந்தர், புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.