நான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன்; ஆனால் எனது அரசியல் ஆன்மிக அரசியல் என்று அறிவித்து சில ஆண்டுகள் கடந்தோடிவிட்ட நிலையில், புத்தாண்டில் அவர் தொடங்கி வைத்துள்ள சர்ச்சை, அவர் அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளது, ரஜினி, தனது அரசியல் நிலைப்பாடு ஆன்மிகத்தை அடிப்படையாக கொண்டது என்பதை கோடிட்டு காட்டி உள்ளது தெளிவாகி உள்ளது.
2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில், 2020ம் ஆண்டின் தொடக்கத்திலேயே அவர், அரசியல் சார்பாக எடுத்து வைத்துள்ள முதல் ‘அடி’யே, திராவிட கட்சிகளை கதற வைத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை….
பெரியார் குறித்த ரஜினி பேச்சு, அதற்கு திராவிட கட்சிகளின் மிரட்டல், இவற்றையும் தான்டி, தான் சொன்னது உண்மையே; அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்ற ரஜினியின் திட்டவட்ட அறிவிப்பு போன்றவை களால், ரஜினி அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்ற பயத்தில் திராவிட கட்சிகளின் எதிர்மறையான அலறல்களை பார்க்கும்போது, அவைகள் நகைச்சுவையாக இருப்பது மட்டுமின்றி, முந்தைய வரலாற்று பிழைகளை மறைக்க அவர்கள் படும்பாடு தமிழக அரசியல் கட்சிகளின் கேவலமான நிலையை உலக்கு எடுத்துக்காட்டி வருகிறது…
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அனது தனது ரசிகர்கள் மத்தியில், தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு, தனது அரசியல் ஆன்மிக அரசியல், விரைவில் கட்சித் தொடங்குவேன் என்று அறிவித்து, தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றங்கள் மக்கள் மன்றங்களாக மாற்றப்பட்ட நிலையில், ரஜினி தொடர்ந்து படங்களை நடிக்க கமிட் ஆனதால், அவரது அரசியல் அறிவிப்பு கேலிப்பொருளானது. அதற்கேற்றால்போல, அரசியலுக்கு அஸ்திவாரம் பலமாக போட்டு வருவதாக கூறி வந்தவர் தொடர்ந்து கல்லா கட்டுவதிலேயும் குறியாக இருந்தார்.
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டு (2020) தொடக்கத்திலேயே அவரது பேச்சு அரசியல் சார்ந்து இருப்பது, அரசியலுக்குள் நுழைவதை உறுதி செய்துள்ளது.
அடுத்த ஆண்டு (2021) சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அவர் தனது அரசியல் காய்களை நகர்த்த முயற்சி செய்து வருவதாக அவரது ஆதரவாளர் தமிழருவி மணியன் உள்பட சிலர் தெரிவித்து வரும் நிலையில், தற்போதைய ரஜினியின் பெரியார் மற்றும் முரசொலி குறித்த விமர்சனம், தமிழக அரசியல் கட்சிகள் மட்டத்தில், குறிப்பாக திராவிடக் கட்சிகளின் மத்தியில் உதறலை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஒருபுறம் நடிகர் கமல், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி தமிழக மக்களின் வாக்குகளை பிரித்து வரும் நிலையில், ரஜினியும் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தால், விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்துக்கொண்டு கட்சி நடத்தி வரும் திராவிட கட்சிகள் உள்பட சில கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறி யாகும் நிலை உருவாகும்.
இதுபோன்ற ஒரு சூழலில்தான், ரஜினியின் பெரியார் குறித்த பார்வை, அவரது அரசியல் பயணத்துக்கு அச்சாரம் போட்டுள்ளது.
இந்திய மதசார்பற்ற (secular) நாடு என்று சொல்லிக்கொண்டே, இந்தியாவின் பெரும்பான்மை மதமான இந்து மத்தை மட்டுமே இழிவுபடுத்திக்கொண்டே அதை பயன்படுத்தி அரசியல் செய்து வருகிறது சில கட்சிகள்.
அதே வேளையில், ஜாதி, மத, இன பாகுபாடுகளை காட்டி, அரசின் சலுகைகள் பெற்றுக்கொண்டு, தாய் நாட்டுக்கு எதிராகவும், மக்களிடையே ஜாதி, மத ரீதியிலான பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கிலும், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் வகையிலும் பல நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.
இதுபோன்ற ஒரு சூழலில், ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக அறிவித்த, ரஜினியின் அரசியல் வருகை, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டிலேயே தமிழகம்தான், ஜாதி, மத ரீதியிலான செயல்களில் அமைதி காத்து வருவது அனைவரும் அறிந்ததே. அதையே காரணமாக வைத்துக்கொண்டு திராவிட கட்சிகள் உள்பட சில அமைப்பு கள் அரசியல் செய்து வருகின்றன. இந்து மதத்தினரையும், இந்து மத கடவுள்களையும் இழிவுபடுத்தி வரும் நிகழ்வுகளும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தான், ரஜினியின் ஆன்மிக அரசியல் இருக்கும் என்பதை கோடிட்டு காட்டியுள்ளது, தற்போதைய பெரியார் குறித்த பேச்சு… அது குறித்த விமர்சனங்களை அவர் எதிர்கொண்ட விதம் தெளிவுபடுத்தி உள்ளது….
ரஜினியின் பெரியார் குறித்த பேச்சுக்கு திமுக, அதிமுக, வி.சி.க, காங்கிரஸ், திக, பெரியார் திக உள்பல சில அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
அதேவேளையில் ரஜினி பேசியது உண்மையே என்று அவருக்கு ஆதரவாக ஆதாரங்களுடன் பல தகவல்களும் வெளியாகி உள்ளன. இது தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திராவிட கட்சிகள் கூறுவது பொய் என்பதும் அம்பலமாகி உள்ளது.
இதுபோன்ற நிலையில்தான், ரஜினியின் பெரியார் குறித்த பேச்சு, தவறு என்று திமுக கழக தலைவர் ஸ்டாலின் கூறாமல், ரஜினி யோசித்து பேச வேண்டும் என்று கூறிக்கொண்டு அமைதியாகி விட்டார்.
ஆனால், ஆன்மிகத்தில் ஊறிப்போய், கோயில் குளங்களில் தேர் இழுத்தும், மண்சோறு சாப்பிட்டும், அலகு குத்தியும் அலப்பறை செய்து வரும் அதிமுகவோ, நாங்களும் பெரியார் கொள்கை உடையவர்கள்தான் என்றும், ரஜினி பெரியார் குறித்த பழைய நிகழ்வுகளை பேசி, ஆராய்ச்சி செய்து பிஎச்டி பட்டம் பெறப்போகிறாரா, வாயை மூடி மவுனமாக இருக்கலாம் என்று அட்வைஸ் செய்கிறது…
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ரஜினியின் பெரியார் குறித்த பேச்சு தவறு என்று கூறும் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்….
சிலர் 1971ம் ஆண்டு நடைபெற்ற இந்துக்களுக்கு எதிரான ஊர்வலத்தில் சாமி படங்கள் மீது செருப்பால் அடித்தது உண்மைதான் என்று திக கட்சியினரே பலர் ஒப்புக்கொண்டுள்ளனர். அதுபோல அப்போதைய பத்திரிகைகளில் வெளியான செய்திகள், புகைப்படங்களும் உண்மை பறைசாற்றி இருப்பதுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆனால், திக தலைவர் வீரமணி போன்றவர்கள், ரஜினியை மிரட்டும் தொனியில், வழக்குகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்ததுடன், தனது அடிவருடிகளைக்கொண்டு, ரஜினி மீது புகார்களும், வழக்குகளும் பதிந்து வருகிறார்…
ஏன் இந்த சலசலப்பு…. நிகழ்வுகள் நடைபெற்று 49 ஆண்டுகள் கடந்த நிலையில், வரலாற்றுப் பிழை ஒன்றை, துக்ளக் நிகழ்ச்சியில் ரஜினி சுட்டிக்காட்டியதற்காக திராவிட கட்சிகள் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளது, இன்றைய தலைமுறையினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது….
சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் ஏராளமானோர், 1971ல் என்ன நடந்தது, பெரியார் கொள்கைகள் என்ன, இந்து மதங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் என்ன, ஏன் நடை பெற்றது போன்ற தகவல்களை தேடித்தேடி வாசித்து வருகின்றனர்…
இதனால் திராவிட கட்சிகளுக்கு எதிரான விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகிறது….
இது, ஜாதி, தங்களைக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தி வரும் அரசியல் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது…. தங்களது பருப்பு இனிமேலும் தமிழக மக்களிடையே வேகாது என்று நினைத்தே, ஆன்மிக அரசியல் நடத்த முனைந்துள்ள ரஜினியை முடக்க திரைமறைவு நிகழ்வுகள் மிரட்டல்கள் அரங்கேறி வருகிறது…
ரஜினியின் ஆன்மிக அரசியல், தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், தற்போதைய அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் ரஜினியை முடக்கவும், அடக்கவும் ஆவேசமாக களத்தில் குதித்துள்ளன.
ஆனால், ரஜினியோ; தனது கருத்து சரியே, அதற்காக மன்னிப்பு கேட்க முடியாத என்று ஆணித்தரமாக கூறி அவர் எடுத்து வைத்துள்ள முதல் ‘அடி’, திராவிட கட்சிகளை கதற வைத்துள்ளது என்பதுதான் உண்மை….