சென்னை: திராவிட மாடல் அரசு என்பது எப்போதும் முதலாளிகளுக்கான அரசு தான் என்பது நிரூபணமாகி உள்ளதாக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
நள்ளிரவில் சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் போராடி வந்த பந்தலும் அகற்றப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. கொளுத்தும் வெயிலில் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டக்காரர்களின் : போராட்ட பந்தல் அகற்றம் திராவிட மாடல் அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு அம்பலமாகி உள்ளதாகவும், திராவிட மாடல் அரசு என்பது எப்போதும் முதலாளிகளுக்கான அரசு தான் என்பது நிரூபணமாகி உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வரும் 21 ஆம் தேதி காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் நேற்றிரவு போலீசார் போராட்ட பந்தலை அகற்றினர். இன்று காலை போராட்டத்திற்கு கலந்து கொண்ட தொழிலாளர்களை கலைந்த செல்ல வற்புறுத்தினர். அத்துடன் அவர்கள் இழுத்து கைது செய்ய முயற்சித்தனர். ஏற்கனவே முக்கிய நிர்வாகிகளை போலீசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீசார் முயற்சி செய்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி அவசர ஆட்கொணர்வு வழக்காக விசாரிக்க வலியுறுதியுள்ளார். பிற்பகலில் விசாரிப்பதாக நீதிபதிகள் பாலாஜி மற்றும் வேல்முருகன் அமர்வு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்க கூட்டணி கட்சியா கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்படபல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்-நிறுவனம்-அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வழங்கப்பட, தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதையும் படியுங்கள்: ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்- உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து நான் நாள்விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். அத்தகு குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் விடியா திமுக அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்? போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுகொண்டு, “நானும் தொழிலாளி” என்று மேடையில் மட்டும் முழங்கும் மு.க.ஸ்டாலினுக்கு சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் போராட்ட பந்தலை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்து சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது தான் தங்களின் முதன்மை நோக்கம் என்று கூறி வந்த தமிழக அரசு, இப்போது அப்பட்டமாக சாம்சங் நிறுவனத்தின் கையாளாக மாறி தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து இரு தரப்பினரையும் அழைத்துப் பேசிய தமிழக அரசு, அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை கண்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு பொம்மை தொழிற்சங்கத்தை உருவாக்கி சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்த அரசு, அதற்கு உடன்படாத தொழிலாளர்களை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திராவிட மாடல் அரசு என்பது எப்போதும் முதலாளிகளுக்கான அரசு தான் என்பதும், தொழிலாளிகளின் நலன் குறித்து அது ஒருபோதும் கவலைப்படாது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசின் இந்த அடக்குமுறையையும், துரோகத்தையும் தொழிலாளர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது. மக்கள்விரோத அரசுக்கு தொழிலாளர்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் தங்களுக்கு விருப்பமான தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கை. ஆனால், சாம்சங் நிர்வாகம் இந்திய சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று பிடிவாதமாக மத்திய தொழிற்சங்கமான சிஐடியு சங்கத்தை ஏற்க மறுத்து பிடிவாதம் பிடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று தங்களது கோரிக்கை மனுவை அளிப்பது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தது மட்டுமல்லாமல், இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வரும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், சிஐடியு மாவட்ட செயலாளருமான இ. முத்துக்குமாரை இன்று காலை 7.30 மணிக்கே சிஐடியு அலுவலகத்திலிருந்து கைது செய்து எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்பதையே மாவட்ட நிர்வாகம் மூடி மறைப்பது பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அவர் காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்கும், சித்ரவதைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளாரோ என்ற சந்தேகம் எழுகிறது. மவாட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோதும் தகவல் தெரிவிக்க மறுக்கிறார்கள். அரசின் இந்த அணுகுமுறை தொழிலாளர் விரோத போக்கையே வெளிப்படுத்துகிறது. இத்தகைய செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.
தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, முத்துக்குமார் அவர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான சங்கம் வைக்கும் உரிமையை அங்கீகரித்து ஏற்பதற்கு சாம்சங் நிறுவனத்தை வலியுறுத்த வேண்டும். மேலும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களையும் விடுதலை செய்வதுடன், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் போன்ற ஜனநாயகப் பூர்வமான இயக்கங்களுக்கு அனுமதி தராமல் மறுக்கம் காவல்துறையின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.