சென்னை: கோடைகாலம் முடிவதற்குள் ஏரி-குளங்களை தூர்வாருங்கள் என தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இடையிடையே கோடை மழை பெய்து வந்தாலும், அக்னி நட்சத்திர வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பொதுமக்கள் பகல் நேரங்களில் வீடு மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியே வரவே பயந்து உள்ளனர்.

இந்த நிலையில், கோடைகாலம் முடிவதற்குள் ஏரி-குளங்களை தூர்வார வேண்டும என்று தமிழ்நாடு அரசை  த.மா.க. தவைலர் ஜிகே வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர்ல  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பரவலாக மழை இருக்கும் என்று சென்னை வானிலை நிலையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது எச்சரிக்கையை அளித்த போதும், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடமும் தமிழக அரசும் தகுந்த முன்னேர்பாடுகள் செய்யாமல் பல்வேறு இடங்களில் அறுவடை செய்து விற்பனைக்கு வந்த நெல்மணிகளும் கொள்முதல் செய்த நெல்மணிகளும் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து வீணாகியுள்ளது.

இது தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.   விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கடைமடைகளுக்கு எளிதாக செல்லும் வகையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். அதோடு கோடை காலங்களில் ஏரி, குளங்களையும் தூர்வாரி தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை அளிக்கும் மழை தண்ணீரை சேமிக்கும் திட்டம் கர்மவீரார் காமராஜர் ஆட்சிக்குப்பிறகு எந்த ஆட்சியாளரும் செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இனிமேலும் காலதாமதம் செய்யாமல் கோடைகாலம் முடிவதற்குள் மழைநீர் வடிகால் பணியையும், போக்குவரத்து சாலைகளை செப்பணிட்டும், இப்பணிகளை ஒருகாலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயடைய உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.