மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதல் அமைச்சராக 1948 முதல் 1962 வரை பதவி வகித்த பிதன் சந்திர ராய் அவர்களின் நினைவாக தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
டாக்டர் பி.சி. ராய் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பிதன் சந்திர ராய் 1882 ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி பிறந்தார் 1962 ம் ஆண்டு தனது 80 வது பிறந்த நாளான ஜூலை 1 ம் நாள் மரணமடைந்தார்.

கொல்கத்தா மருத்துவ கல்லூரியில் இளநிலை படிப்பை முடித்துவிட்டு. தனது விடா முயற்சியால் பலமுறை போராடி விண்ணப்பித்து இங்கிலாந்து சென்று மருத்துவத்துறையில் எப்.ஆர்.சி.எஸ்., மற்றும் எம்.ஆர்.சி.பி., ஆகிய பட்டங்களை ஒரே நேரத்தில் பெற்ற பிதன் சந்திர ராய் தனது ஆட்சிக்காலத்தில் மேற்கு வங்கத்தில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கினார்.
1928 ம் ஆண்டு இந்திய மருத்துவ கழகத்தை தோற்றுவித்த டாக்டர் பி.சி. ராய் 1933 ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் என்ற அமைப்பை நிறுவ காரணமாக இருந்ததோடு அந்த அமைப்பின் முதல் தலைவராகவும் பதவி வகித்தார், இந்த அமைப்பு 2020 ம் ஆண்டு முதல் தேசிய மருத்துவக் கழகம் என்ற பெயரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்திய சுதந்திரத்திற்க்காக பாடுபட்டவர்களில் ஒருவரான இவர், முதல் அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பதவிகளை வகித்திருந்தாலும், தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு தினமும் ஒருமணி நேரம் ஒதுக்கி மருத்துவம் பார்த்து வந்தார், மேலும் தனது இல்லத்தை தன் மறைவிற்குப் பின் மருத்துவமனையாக மாற்றியமைக்க வழி செய்தார்.
மருத்துவ துறை மூலம் மக்களுக்கும் மருத்துவர்களின் நல்வாழ்விற்கும் பாடுபட்ட டாக்டர் பி.சி. ராய் அக்காலத்தில் இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார், அவரின் நினைவாகவே ஜூலை 1 ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.