பெங்களூரு

கொரோனா தடுப்பூசி குறித்த முக்கிய சந்தேகங்களுக்கான விடைகள் இதோ

 

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகவும் வேகமாகப் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   அதே வேளையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.  பொதுமக்களுக்குத் தடுப்பூசி குறித்து பலவித சந்தேகங்கள் எழுந்துள்ளன.   அவற்றில் முக்கியமானவற்றுக்கான  விடைகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.  இவை பிரபல தொற்று நோய் நிபுணர் ககன்தீப் அளித்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதியான பிறகு எப்போது கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.?  

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் நோயில் இருந்து குணமான உடன் தடுப்பூசி போடலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  ஆனால் உலக சுகாதார நிறுவனம் கொரோனாவில் இருந்து குணமாகி 6 மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.   இந்தியாவில் குணம் ஆகி சுமார் 1 முதல் 3 மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

பிரபல தொற்று நோய் நிபுணர் ககன்தீப் காங், “கொரோனா பாதிப்பு என்பதும், கொரோனா தடுப்பூசிக்குச் சமம் ஆகும்.   எனவே குணமான பிறகு நான்கு முதல் 8 வாரம் தடுப்பூசி போடக் காத்திருக்க வேண்டும் என நாங்கள் பரிந்துரைக்கிறோம்.  தடுப்பூசி போட்டு கொள்வோரின் உடலில் அதை ஏற்க இந்த கால அவகாசம் வேண்டும்.   இல்லையென்றால் அது வீணாகி விடும்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள போது தடுப்பூசி போட்டுக் கொண்டால் என்ன ஆகும்?

கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் உடலில் முதலில் ஐஜிஎம் என்னும் ஆண்டி பாடிகள் உருவாகின்றன.  தொற்று ஏற்பட்ட ஒரு வாரத்தில் இந்த ஆண்டி பாடிகள் உற்பத்தியாக தொடங்கி மூன்று வாரத்தில் உச்சத்தை அடைகிறது.  அந்த பிறகு உடனடியாக குறைகிறது.  மூன்று வாரங்களுக்குப் பிறகு ஐஜிஜி என்னும் ஆண்டி பாடிகள் உருவாகின்றன.  .

எட்டு வாரங்களில் ஐஜிஜி உற்பத்தி மிகவும் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன.  இவை வெகுநாட்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கின்றன  கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுப் பாதிப்பு தடுக்கப்படுகிறது.   இவை குறையத் தொடங்கும் போது தடுப்பூசிகள் போட்டு கொள்வது முழுப்பலனை அளிக்கும்  எனவே பாதிப்பு நேரத்தில் தடுப்பூசி போடவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இரு டோஸ்களுக்கு இடையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் என்ன ஆகும்?

பெரும்பாலான மக்களுக்கு இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் அது மிகவும் குறைவாகவோ அல்லது நடுத்தரமாகவோ இருக்கும்.   தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு எத்தனை நாட்களில் பாதிப்பு என்பதை பொறுத்து இது மாறுபடும்.  தடுப்பூசி போட்டுக் கொண்டு ஒன்று முதல் மூன்று வாரம் வரை பாதிப்பு ஏற்பட்டால் விளைவுகள் தீவிரமாக இருக்காது எனினும் ஓரளவு பாதிப்பு இருக்கும்.

அதே வேளையில் முதல் டோஸ் போட்டுக் கொண்டு 3 வாரங்களுக்கு பிறகு பாதிப்பு ஏற்பட்டால் மிகவும் குறைவான பாதிப்பே உண்டாகும்.  அது மட்டுமின்றி கொரோனா தாக்கத்தால் உடலில் ஆண்டி பாடிகள் உற்பத்தி ஆவதால் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோச் போடுவதால் அது மேலும் அதிகரிக்கும்.

இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்ளத் தாமதம் ஆனால் மீண்டும் முதல் டோஸ் போட வேண்டுமா?

இரு டோஸ்களுக்கு இடையில் இடைவெளி விடுவதன் மூலம் ஆண்டி பாடிகள் அதிக அளவில் உற்பத்தியாகும் என்பது சோதனையின் போது தெரிய வந்துள்ளது.  இதில் கோவிஷீல்ட் மருந்துக்கு 12 வாரம் வரையிலும் கோவாக்சின் மருந்துக்கு 4 வாரங்கள் வரையிலும் இடைவெளி விட இந்தியாவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஆனால் இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ளவில்லை என்றால் கவல கொள்ள தேவையில்லை.

இதன் மூலம் ஆண்டிபாடிகள் உற்பத்தி சிறிது காலத்துக்குத் தள்ளி வைக்கப்பாடும்.   குறைந்த காலத்துக்கு இரண்டாம் டோஸ் போட தாமதம் ஆனால் மீண்டும் முதல் டோஸ் போட்டுக் கொள்ளத் தேவை இல்லை.

கர்ப்பம் அடைந்த மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

தற்போதுள்ள தடுப்பூசி மருந்துகளைப் பொறுத்த வரையில் கர்ப்பம் அடைந்தோர் மற்றும் தாய்ப்பால் கொடுப்போர் போட்டுக்கொள்வது பாதுகாப்பானதாக உள்ளன.   சோதனையின் போது ஊசி போடப்பட்ட சில பெண்கள் கர்ப்பமானது அதன் பிறகே தெரிய வந்தது.  ஆயினும் அவர்களுக்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படவில்லை.    மேலும் ஆண்டி பாடிகள் கருவில் உள்ள சிசுவுக்கும் செல்லும் என்பதால் பிறக்கப்போகும் குழந்தையும் கொரோனாவில் இருந்து காக்கப்படுகிறது.

ஒவ்வாமை உள்ளோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?  தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏதும் கட்டுப்பாடுகள் உள்ளனவா?

ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் ஒவ்வாமை ஏற்பட்டவர்கள் அடுத்த டோஸ் போட்டுக் கொள்ளக் கூடாது என்பதே முக்கியமான கட்டுப்பாடு ஆகும்.   மற்றபடி உணவு, மருந்து, ஆகியவற்றின் ஒவ்வாமை உள்ளவர்களுக்குத் தடுப்பூசியால் எவ்வித பக்க விளைவும் ஏற்படவில்லை.  கீமோதெரபி போன்ற சிகிச்சை பெறுவோர் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு ஆண்டி பாடிகள் சோதிக்கப்பட்டனவா?

ஐஜிஎம் மற்றும் ஐஜிஜி ஆண்டிபாடிகள் சோதிக்கப்பட்டதில் அவை இரண்டும் ஒன்று சேர்ந்து வைரசுக்கு எதிராகப் போராடி அவற்றைத் தடுக்கின்றன.  மேலும் இந்த வைரஸ அழிக்கும் செல்களை இவை உருவாக்கி மேலும் இயற்கையான வைரஸ் எதிர்ப்பு செல்களின் உதவியுடன் அழிக்கின்றன.  இந்த ஆண்டிபாடிகள் வைரசுடன் நேரடியாக மோதுவதில்லை என்றாலும் அதைச் செய்யும் மற்ற செற்களுக்கு உதவுகின்றன.

ஆனால் இந்த ஆண்டிபாடிகள் குறித்த முழு ஆய்வு இப்போது முடியவில்லை.   எனவே இது எந்த அளவுக்கு செல்களை உருவாக்கும் என்பதும் திட்டவட்டமாக இப்போது சொல்ல முடியாது.   ஆய்வுகள் தொடர்வதால் விரைவில் இது குறித்த முழு விவரங்கள் வெளிவரும்,.   மேலும் இந்த ஆண்டி பாடிகளை முழுமையாக சோதிக்கும் முறையும் இன்னும் ஆய்வில் உள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு எத்தனை நாட்கள் கழித்து மற்ற தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளலாம்?

நமது நோய்த்தடுப்பு அமைப்பு பல்வேறு தொற்றுகளைத் தடுக்கும் திறன் கொண்டது.   எந்த ஒரு காலத்திலும் அது ஒரு தொற்றைத் தடுக்கும் பணியில் சோர்வடையாது.   இந்த தடுப்பூசி போடுவது என்பது தொற்றுகளை தடுக்கும் திறனை அதிகரிப்பதாகும்.  பொதுவாக இரு வெவ்வேறு தடுப்பூசி போடும் போது அவை இரண்டும் அவற்றின் தன்மைக்கு ஏற்ப ஒன்றாகவோ அல்லது 4 வார இடைவெளியிலோ போடலாம்.