புதுடெல்லி: திவாலாகும் செயல்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அலைக்கற்றைகளை விற்பனை செய்வதற்கு மத்திய தொலைதொடர்பு துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், ஏர்செல் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

திவாலாகும் செயல்பாடு நடந்து வருகையில், அலைக்கற்றை விற்பனை செய்வதற்கு உரிமை இல்லை என்பதால், இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வதற்கும் தயாராக இருப்பதாக மத்திய தொலைதொடர்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் திவாலாகும் செயல்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அலைக்கற்றை விற்பனை தொடர்பான தனது நிலையை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், மத்திய தொலைதொடர்பு துறை தெரிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திவாலாகும் செயல்பாடு நடைபெறும் நிலையில், சம்பந்தப்பட்ட அலைக்கற்றை என்பது அரசுக்கு சொந்தமானது. எனவே, அதை திவாலாகும் நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.