வுகான்
சீனாவின் வுகான் நகரிலேயே தங்கி விட்ட கேரளப் பெண் அனிலா பி அஜயன் தனது அனுபவங்களைத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உள்ள வுகான் நகரில் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கு தங்கி இருந்த அனைத்து இந்தியர்களையும் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் மத்திய அரசு அழைத்து வந்தது. இந்தியாவுக்கு வர மறுத்து கேரளப் பெண்ணான அனிலா பி அஜயன் அங்கேயே தங்கி விட்டார்.
சீன அறிவியல் அகாடமியின் கீழ் செயல்படும் ஹைட்ரோ பயாலஜி கல்வி நிறுவனம் வுகான் நகரில் உள்ளது. அங்கு அனிலா கல்வி பயின்று வந்தார். இவர் கேரளாவின் பண்டலம் என்னும் இடத்தை சேர்ந்தவர் ஆவார். கொரோனா அச்சத்தால் முதலில் வுகான் நகரில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது வுகான் நகரில் கொரோனா பாதிப்பு குறைந்து ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளது.
அனிலா பி அஜயன், “வுகான் நகரில் இதுவரை ஆம்புலன்ஸ் சைரன் ஒலி மற்றும் கொரோனா குறித்த சீன மொழி வானொலி செய்திகள் மட்டுமே ஒலித்து வந்தது. எனது பேராசிரியர் உள்ளிட்ட இங்குள்ள அனைத்து மக்களும் முக வாட்டத்துடன் சோர்வாகக் காணப்பட்டனர். தற்போது நிலைமை மாறி உள்ளது. மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் உள்ளனர்.
ஆயினும் இன்னும் பல இடங்களில் கட்டுப்பாடு உள்ளன. சாலைகள் தொடர்ந்து கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன. பேருந்தில் செல்ல மற்றும் கடைகளுக்குச் செல்ல தெர்மல் ஸ்கிரீனிங் செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அவருக்கு உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் கடைகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
காலை வேளைகளில் கடைகளுக்குச் செல்ல முதியோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அலுவலகங்களிலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. கலந்துரையாடல்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே நடைபெறுகிறது. ஊரடங்கின் போது கடைப்பிடிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
முன்பு நான் இங்குள்ள பேருந்துகளில் சென்று வெளி உணவுகளைச் சாப்பிட்டு வாழ்க்கை நடத்தி உள்ளேன். எனவே எனக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகம் இருந்தது. நான் இந்தியாவுக்கு கொரோனா வைரஸை எடுத்துச் செல்ல விரும்பவில்லை. ஆகவே நான் இங்கேயே தங்கி விட்டேன் இங்கு நான் சுய தனிமையில் 77 நாட்கள் இருந்தேன்.
அந்த நாட்கள் எனக்கு எளிதாக இல்லை. நான் வசித்து வந்த அடுக்ககத்தில் எனது கல்வி நிலைய மாணவர்களும் பேராசிரியர்களும் தங்கி இருந்தனர். அவர்களில் பலர் தங்கள் ஊருக்குச் சென்று விட்டனர். நான் தங்கி இருந்த இரண்டாம் மாடியில் நான் ஒருத்தி மட்டுமே இருந்தேன். மிகவும் அமைதியாக இருந்த நேரத்தில் திடீரென ஆம்புலன்ஸ் சைரன் ஒலி கேட்கும் நான் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே உறங்குவேன்.” என தன் அனுபவங்களை தெரிவித்துள்ளார்.