டெல்லி: மக்களிடையே பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையல், வெறுப்பு பேச்சுகள் மீதான நடவடிக்கைக்கு புகார்கள் வரும் வரை காவல் துறை காத்திருக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்துக்களுக்கு எதிராகவும் வெறுப்பு பேச்சுகள் பேசப்படுகிறது என்று கூறிய நீதிபதிகள், அவ்வாறு நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில், இந்துக்கள் மீதான வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து வருகின்றன. பாஜக ஆளும் உ.பி., உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேசுக்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், வெறுப்பு பேச்சுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
முஸ்லிம்களை சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி ஒருவர் பேசியதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.எம். ஜோசப், ரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, ஜனநாயகமும் மத நடுநிலையும் கொண்ட நாடான இந்தியாவில் இதுபோன்ற பேச்சுக்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற பேச்சுக்கள் இந்துக்களுக்கு எதிராகவும் பேசப்படுவதாகக் குறிப்பிட்டனர்.
இதைத்தொடர்ந்து பிறப்பித்த உத்தரவில், நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். நாம் மதத்தை விமர்சிப்பது சோகமானது. . இதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். “நாட்டில் வெறுப்பு சூழ்நிலை நிலவுகிறது” என்றும் கூறியதுடன், இதுபோன்ற ஸ்பீச்சை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவது தவறானது என்று கண்டித்தது. அடிப்படை உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்க வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு இருக்கிறது. வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் காவல் துறை டிஜிபிக்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், எந்தவொரு மதம் தொடர்பாக வெறுப்பு பேச்சுகளை பேசுபவர்கள் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளதுடன், அதுதொடர்பான புகாருக்காக காத்திருக்காமல், காவல் துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நாட்டின் மதச்சார்பின்மை தன்மையை பாதுகாக்கும் நோக்கில், தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கவும், நடவடிக்கைகளை எடுக்கவும் காவல் துறை முன்வர வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.