நாகை: அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்காதீர்கள் என்றும், மீனவர் பிரச்சினையில் மத்தியஅரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

நாகையில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும் வருகிறார். இன்று காலை நாகையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
மக்கள் முன்னால் நின்று மீண்டும் அழைப்பு விடுக்கிறேன் தொகுதி மறுவரையறை தொடர்பாக கூட்டப்பட்டுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன், “தொகுதி மறுசீரமைப்பு பெயரில் மாநில உரிமைகளை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்கிறது. தமிழநாட்டு எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
சில கட்சிகள், நாங்கள் வர வாய்ப்பில்லை.. வர முடியாது என கூறியுள்ளன. அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு வர முடியாது என்று கூறுபவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இது தனிப்பட்ட கட்சி பிரச்னையோ, திமுக பிரச்னையோ கிடையாது. இது தமிழ்நாட்டின் பிரச்னை. இது நமது உரிமை. இவர் என்ன அழைப்பது நாம் என்ன போவது என நினைக்க வேண்டாம். இதில் கௌரவம் பார்க்க வேண்டாம். இதை அரசியலாக்க பார்க்காதீர்கள். வர முடியாது என கூறும் கட்சிகள் கண்டிப்பாக வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”. எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் தனிப்பட்ட வெறுப்பு ஒரு போதும் இருந்ததில்லை. எந்த மொழியாவது திணிக்கப்பட்டால் தமிழ்நாடு போராட்டக் களம் காணாமல் இருந்ததில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அதுபோல, மீனவர் பிரச்சனையை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்பதையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளது. நாகையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தற்போதெல்லாம் கைது செய்யும் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை அபராதமும் விதிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 3,000-க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக தொடர முடியாது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களின் நலனை நிலைநாட்டும் வகையில் உறுதியான நடவடிக்கை தேவை என வலியுறுத்தியவர், மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், மீனவர் பிரச்சனையை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும், ஒவ்வொரு பிரச்சனைகளிலும் தமிழக அரசு போராடிக்கொண்டு தான் இருக்கிறது என்று கூறினார்.