டெல்லி: முக்கியமான ஆவணங்கள் மற்றும் தகவல்களை  வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பகிரவேண்டாம் என்று  அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய உளவுத்துறை அனைத்து அரசு அதிகாரிகளும் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற தனியார் நிறுவனங்களின் தளங்களில் ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதைத் தடை செய்துள்ளது. தேசிய தகவல் தொடர்பு பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மீறுவதைத் தடுக்க அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து அமைச்சகங் களுக்கும் அனுப்பப்பட்ட தகவல் தொடர்பு அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ரகசிய ஆவணங்கள் மற்றும் காணொலி கூட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சக அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி ரகசியமான மற்றும் முக்கியமான ஆவணங்களைப் பகிர வாட்ஸ்-ஆப், டெலிகிராம் போன்ற செயலிகளை உபயோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற அனுப்பப்படும் தகவல்கள், நாட்டுக்கு வெளியே இருக்கும் தனியார் நிறுவன சர்வர்களால் கட்டுப்படுத்தப்படுவதால், இது தவறாக பயன்படுத்தப் பட வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய விவகாரங்கள் குறித்து காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டங்களின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி முக்கிய விவகாரங்கள் குறித்து காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டங்களின்போது ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட உபகரணங்களை கூட்டம் நடைபெறும் அறைக்கு வெளியே வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அலுவலகங்களில் கூகுள் ஹோம், அலெக்ஸா, சிரி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.