டில்லி

த்திரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரசை குறைவாக எடை போட வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 11 ஆம் தேதி முதல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரபு அமீரகத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.   அதற்கு முன்பாக அரபு நாடுகளின் பிரபல செய்தி ஊடகமான கல்ஃப் நியூஸ் க்கு ராகுல் காந்தி பேட்டி அளித்தார்.  அப்போது அவரிடம் இந்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.

குறிப்பாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணி காங்கிரசுக்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இரு தொகுதிகள் மட்டுமே அளிக்க உள்ளதாக வந்த செய்திகள் குறித்து கேட்கப்பட்டது.   இந்த இரு தொகுதிகளான ரே பரேலி மற்றும் அமேதி தொகுதியில் ஏற்கனவே ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

ராகுல் காந்தி, “காங்கிரஸ் கட்சியை யாரும் குறைவாக எண்ண வேண்டாம்.  உத்திரப் பிரதேசத்தில் மக்களவை தேர்தலை தனியாகவே சந்திக்க காங்கிரஸ் தயாராக உள்ளது.   நாங்கள் உத்திரப் பிரதேசத்தில் தனியாகவே வெற்றி  பெற்று மற்ற கட்சிகளை அதிர வைப்போம்.

நாங்கள் கூடிய வரையில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்க முயன்று வருகிறோம்.   ஒரு சிலர் ஊடகங்களில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தால் மட்டுமே காங்கிரஸால் மோடியை வீழ்த்த முடியும் என சொல்கின்றனர்.   இது தவறானது.   நான் மீண்டும் சொல்கிறேன்.   உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பலத்தை யாரும்  குறைவாக மதிப்பிட வேண்டாம்.

எங்கள் முதலாவது நோக்கம் மோடியை விழ்த்துவது என்பதை நாங்கள் மறுக்க்கவில்லை.  அதனால் தான் நாங்கள் எங்களுடன் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் கூட்டணி அமைத்துள்ளோம்.   ஆனால் நாங்கள் பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் முதன்மை கட்சி என்பதை மறந்து விட வேண்டாம்’ என பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உத்திரப் பிரதேசத்தில் தனித்து போட்டியிடுவோம் என சூசகமாக ராகுல் காந்தி தெரிவித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.