டில்லி
கொரோனாவுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஹைட்ரோக்ளோரோகுவின் மருந்தை மருத்துவர் அனுமதி இன்றி யாரும் உட்கொள்ளக் கூடாது எனச் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைர்ஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ரோக்ளோரோகுவின் மற்றும் அரித்ரோமைசின் ஆகியவற்றைக் கொடுக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பலரும் இந்த மருந்துகளை வாங்கி வைக்கத் தொடங்கி உள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சக இணைச்செயலர் லவ் அகர்வால் இன்று செய்தியாளர் சந்திப்பில், “கொரோனா வைரஸ் தொடர்பான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் எளிதாகக் கிடைத்து வருகின்றன. ஒரு சில தடங்கல்களும் நாளைக்குள் சரியாகி விடும். ஆனால் பலர் மருத்துவரைக் கேட்காமல் பல விதமான மருந்துகளைச் சாப்பிட்டு வருகின்றனர். இவை அனைத்தும் சோதனை நிலையில் உள்ளது.
எனவே ஒரு சிலருக்கு இந்த மருந்துகள் பக்கவிளைவை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதைப் போல் ஹைட்ரோக்ளோரோகுவின் என்னும் மருந்து கொரோனா உறுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் இதை மருத்துவர் அனுமதி இல்லாமல் சாப்பிடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.