சென்னை: சமூக வலைதள தகவல்களை பார்த்து வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும், பொது இடங்களில் தனிப்பட்ட, மொழி வாரியான, அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்லக் கூடாது என ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா கூறினார்.
தமிழ்நாட்டில் சமீக நாட்களாக வடமாநிலத்தவர்களுக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்து வருகின்றன. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், எந்தவித முன்யோசனையும் இன்றி வடமாநிலத்தவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். ஆனால், வடமாநிலத்தவர்கள் இல்லையென்றால், தமிழ்நாட்டின் வர்த்தகம் முடங்கி விடும், தமிழர்கள் குடிகாரர்களாக உள்ளனர், அவர்கள் வேலைக்கு வந்தால், வடமாநிலத்தவரை ஏன் அழைக்கிறோம் என வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஓப்பனாகவே கூறியுள்ளார்.
இதற்கிடையில், சில டியூபர்கள், வடமாநிலத்தவர்கள் மீதான கருத்துக்களை வைத்து பரபரப்பு செய்திகளை வெளியிடுவதால், வடமாநிலத்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. அதுபோல ஒரு சம்பவம் ஓடும் ரயிலில் நடைபெற்றது, சிலர் சேர்ந்து ரயிலில் பயணம் செய்த வடமாநிலத்தவர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் செய்தியளார்களை சந்தித்த ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா, வடமாநில இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, “சமூக வலைதளங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடைத்த தகவல்களை பார்த்து ஆத்திரமடைந்து வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
பொது இடங்களில் தனிப்பட்ட, மொழிவாரியான, அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்லக் கூடாது என்றவர், சம்பந்தப்பட்ட வீடியோவை ஷேர் செய்தவர்களுக்கு சம்மன் கொடுத்து விசாரணை நடத்தினோம் என்றார்.
மேலும், இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். சம்பவம் குறித்து தகவல் அளித்தவர்களுக்கு நிச்சயம் சன்மானம் வழங்கப்படும்” என்றும் கூறினார்.