சென்னை: அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற அமைச்சர்களுக்கு இடையே ஏற்பட்ட சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அடுத்த முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ் என தேனி மாவட்டத்தில் இன்று புதிதாக போஸ்டர் முளைத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சலசலப்புக்கு இடம் கொடுக்க வேண்டாம்! தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட கருத்துகளை கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
இதன் காரணமாக இன்று, மூத்த அமைச்சர்கள் துணைமுதலவர், மற்றும் முதல்வர் இடையே அடுத்தடுத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, கட்சியில் சலசலப்புக்கு இடம் கொடுக்க வேண்டாம் என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
ஜெ.மறைந்த பிறகு, எடப்படி முதல்வராக பதவியேற்றது முதலே, துணைமுதல்வர் ஓபிஎஸ் அணியினருக்கும், எடப்பாடி அணியினருக்கும் இடையே முழுமையான ஒற்றுமை ஏற்படாமல் உரசல் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில், ஜெயிலுக்கு சென்ற சசிகலா விரைவில் விடுதலையாக உள்ளதால், அதுகுறித்த பேச்சும் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு முதல்வர் குறித்த அறிவிப்பும், அவருக்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதும், பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அதிமுகவில் இன்னும் கோஷ்டி பூசல் தொடர்ந்து வருகிறது என்பது அம்பலமானது.
இந்த நிலையில், இன்று காலை தேனி மாவட்டத்தில், அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என்றும், ஜெயலலிதா ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓபிஎஸ் என்றும் திடீரென போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த அதிமுகவினர் பரபரப்பு அடைந்தனர். சில இடங்களில் ஓபிஎஸ் எதிர்க்கோஷ்டியினர் இந்த போஸ்டரை கிழித்து எறிந்தனர்.
இந்த நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக அதிமுக மூத்த அமைச்சர்கள் 12 பேர் இன்று சுதந்திர தின விழா நிகழ்ச்சி முடிந்ததும், அவசர ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து, ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று அவரிடமும், பின்னர் முதல்வர் வீட்டுக்கு சென்று எடப்பாடியிடமும் தொடர்ந்து, மாறி மாறி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, தற்போது அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு என அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
அறிக்கையில், அறிக்கையில், கட்சி நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக பேசியது பேச்சு பொருளாக ஆகி விட்ட தாகவும், அதிமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட கருத்துக்களை கூறினால் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜெலலிதா காட்டிய வழியில் ஜனநாயக ரீதியில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கடந்த 4 ஆண்டை போலவே வரும் ஆட்சிக்காக ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரம் இது என்றும் சலசலப்புகளுக்கு இடம் தராமல் தொண்டர்கள் அனைவரும் மக்கள் பணிகளிலும், கட்சி பணிகளிலுமே ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்னர். இந்த அறிக்கையின் மூலம் அதிமுகவில் எந்த விதமான பிளவோ அல்லது பிரிவோ ஏற்படப்போவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது.