ஐதராபாத்:
நதிகளை இணைக்க மாநில அரசு அதிகளவில் செலவிட வேண்டாம் என்று இந்தியாவில் வாட்டர் மேன் மற்றும் மாகசேசே விருது பெற்றவருமான ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் மேலும் கூறுகையில், ‘‘நதிகளை இணைப்பதற்கு செலவு செய்வதை விட்டுவிட்டு, நதிகளை சுத்தம் செய்வது மற்றும் ஆறுகளுக்கு புத்துயிர் கொடுத்து மக்கள் பயன்பெறும் வகையில் பரவலாக்கப்பட்ட நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நதிகள் இணை க்கப்பட்டால் நீர்நிலைகளை சேதமடையும்.
அதோடு ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களையும் பாதிக்கும். மேலும், ஒவ்வொரு ஆறுக்கு என்று தனித்தனியாக உள்ள சுற்றுச்சூழல், அவற்றை நம்பிய தாவரங்கள், விலங்கினங்கள் பாதிக்கும். அதேசமயம் ஆறுகளை அடிப்படையாக கொண்ட மக்களின் மத நம்பிக்கைகள், கலாச்சார செயல்பாடுகள் பாதிக்கும்’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘நதிகளை இணைப்பதை விட்டு மக்களின் இதயங்களையும், மனதையும் இணைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறுகள் என்பது சாலைகள் கிடையாது.
ஒவ்வொரு ஆறுக்கும் தனி உரிமை உண்டு. ராஜஸ்தானில் 8 ஆறுகள் மக்களின் இதயம் மற்றும் மனதை கொண்டு தான் இணைக்கப்பட்டுள்ளது. நதிகள் இணைப்பதாலும், மணல் குவாரிகள், அதிகப்படியான நீரோட்டம் ஆறுகளை அழித்துவிடும்.
இயற்கைக்கு எதிராக செயல்படும் தலைவர்களை மக்கள் பின் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மு ந்தைய காலத்தில் ஞானிகள் தலைவர்களையும், மக்களையும் சரியான பாதையின் வழிநடத்தினார்கள். ஆனால் தற்போதைய நவீன காலத்தில் ஞானிகள் தலைவர்களை நல்வழிபடுத்துவதை விட்டுவிட்டு அவர்ளோடு கைகோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர்’’ என்றார்.